இது வேண்டுமோ இனி நமக்கு -- மணியன்

மண்ணில் பிறந்த பெண்கள் இவர்
விண்ணில் திருமணம் நடப்பது போல் - மனக்
கண்ணில் தினமும் கண்டு மனதில்
எண்ணி என்றும் மகிழ்வரே. . .

மண நாளை தினமும் நினைந்து
மனதினை நிரப்புவர் தனது
மணவாளன் நல்ல ஒரு
மன்மதன் போல் இருப்பான் என்றே. . .

அந்த நாளை கொண்டு வர
இந்த பெண்கள் முனைந்திடினும்
எந்த ஒரு முயற்ச்சியிலும்
வந்து கிடைப்பது துன்பம் தானே. . .

அருமையாக பலரும் வீடு தேடி
ஒருமையாக வந்து இங்கு
பெருமையாக பேசிடுவர்
இருவரும் தான் பொருத்தம் என்று. . .

அத்தான் என அழைக்க இந்த
பித்தான பேதை தவித்திருக்க
கத்தையாக பணமுமதை இவன்
மொத்தமாக தரவேண்டும் என்பான். . .

வாழ நினைத்த மணப் பெண்ணோ
அழக் கூட நீர் இன்றி
கோழை இவன் என்று கூறி
பாழுங் கிணறு தான் குதிப்பாள். . .

இதைப் போல பல பெண்டிர் - மனம்
பதைக்க உயிர் எரித்த
சிதை நமக்கு சொல்லிடும - சோக
கதைகள் பல நூறு ஆண்டு. . .

அழித்திடுவோம் இப்பழக்கமதை - என
ஒலித்திங்கு குரல் கொடுத்தோர்
ஒழித்திடவோர் வழியும் இன்றி
கழித்திடுவர் காலமதை. . .

கொட்டு மேளம் கொட்டும் போது
மொட்டு போன்ற கழுத்தும் அதில்
கட்டும் தாலி எண்ணி மங்கை - மனம்
விட்டு கண்ணீர் சொறிவதுவோ. . .

அன்னம் போன்ற பெண்களை
மன்னவர்கள் தேடிச் சென்று
முன்னர் செய்த திருமணங்கள்
இன்னமும் கதையாய் உள்ளதே. . .

அஞ்சி வாழும் பெண்கள் நீவிர்
கெஞ்சி என்றும் வாழ்ந்தாலே
மிஞ்சி தான் போய் விடுவர்
வஞ்சகரை வேர் அறுப்பீர். . .

எடுத்திடுங்கள் கணைகள் பல
தொடுத்திடுங்கள் பாவிகள் மீது
தடுத்திடுவோர் யாராயினும்
படுத்திடுவர் நும் பலம் கண்டு. . .

வர தட்சினை கொடுத்து இங்கு
வரன் தேடும் காலம் மாற
உரம் வாய்ந்த ஆண்கள் நீவிர்
பெரு முயற்சி தான் செய்வீர். . .

பெண்கள் இந்நாட்டுடைய
கண்கள் என்பதை மறவாமல்
ஆண்கள் நீரும் மனது வைத்து
பண்பு கெட்ட செயல் தவிர்ப்பீர். . .

நின்று சிரிக்கு வரதட்சினையை
வென்று உங்கள் வலிமையினால்
கொன்று அதன் கதை முடித்தால்
என்றும் மகிழ்ச்சி பொங்கிடுமே . . . ! ! !

எழுதியவர் : மல்லி மணியன் (5-Feb-14, 8:15 pm)
பார்வை : 610

மேலே