வாத்தியார்

தாய் அதட்ட
அழுது கொண்டே நான் எழுந்தேன்!
அரைத் துயிலாய்
அரை மனதாய்!
ஆங்கில வாத்தியார் முகம்
என் மனக்கண்ணில்!
புரியாத பேச்சு மொழி
என் மனதிலோ வலி!
அவர் அடிதாங்க
தடிப்பாய் உடைகள் பல!
ஒன்றன் மேலொன்றாய்
அடுக்கடுக்காய்!
எட்டப்பன் ஒருவன்
என் நண்பன்!
போட்டுக் கொடுத்துவிட்டான்
போட்டவுடை களையவிட்டான்!
வட்டிஸ் திஸ் என்றார்
திரு திருவென நான் விழித்தேன்!
திருந்தாத கழுதை என்றார்
கோட்டுப் போட்ட ஆசானவர்!
நாலடிப் பிரம்பெடுத்தார் - முதுகிலே
நாலடி போட்டுவிட்டார்!
முடியவில்லை வலி தாங்க
முடியவில்லை அழுதுவிட்டேன்!
முறுவல் விட்டான் - என்
நண்பன் பகிடிவிட்டான்!
பொறுக்க முடியவில்லை -எடுத்துவிட்டேன்
அவன் முகத்தில் புத்தகத்தால்!
கெட்டவுட் என்றார் வௌியே
போ என்றார் - அதனால்!
துணிவு கொண்டேன் -ஆங்கிலம்
இனி படிப்பதென்று!