எங்கே தேடுவேன் என் கிராமத்தை

ஆறாண்டு அரபு நாட்டு வனவாசத்திற்குப் பிறகு
ஆனந்தமாய் திரும்பி வந்தேன்
என் கிராம மண் வாசம் நுகர...
ஊருக்குள் நுழையும் முன்னே
புழுதி வாசம் வீசும்
சிறப்பு மிக்க செம்மண் சாலைகள்
தார் குடித்து கருத்திருந்தது
வரகும், கம்பும் விளையும்
வண்டல் பூமி்
வீட்டு மனைகளாய்
விற்பனையாகி இருந்தன
ஊருக்கு அழகு சேர்க்கும்
குச்சி வீடுகள் மச்சி வீடுகளாய்
உருமாறி கிடந்தது
பாவாடை தாவணி
பருவ சிட்டுகள் இன்றி
நைட்டி நங்கைகள்
நடமாடிக் கொண்டிருந்தனர்
தேனினும் இனிய நீர் கொடுக்கும்
செங்குளம் கம்பி வேலிக்குள்
அடைபட்டு அபகரிப்பிற்கு உள்ளாகி இருந்தது
வயல் வேலைக்கு சிட்டாய் பறக்கும்
அன்னம்மா குப்பம்மா எல்லாம்
ஒய்யாரமாய் நடைபோட்டு
ஊர்கதை பேசி சென்றனர்
நூறு நாள் வேலை செய்ய...
அரசு பள்ளி மாணவர் சேர்க்கையின்றி
ஈயாட
தனியார் ஆங்கில பள்ளி ஒன்று
குக்கிராமத்திலும்
கோலோச்சி நிற்கிறது...
சுரைக்கொடி படர்ந்திருந்த வீடுகளில்
இரும்பு சட்டி ஒன்று கவிழ்ந்திருந்தது
டிஷ் என்ற பெயரோடு
நிலை தடுமாறினேன்...
என் கிராமம் எங்கே...?
அடையாளம் தொலைத்து
அரிதாரம் பூசி நிற்கும்
இதுவல்ல என் கிராமம்...
எங்கு தேடுவேன்
மண் மணம் வீசிய
எனதருக் கிராமத்தை....
பாரதி ராஜா படத்தின்
பழைய சி.டி யில் தான் காண முடியுமோ
பசுமை போர்த்திய என் கிராமத்தின் சாயலை...

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Feb-14, 10:05 pm)
பார்வை : 75

மேலே