நாணம் என்னவெட்கம் என்ன

நாணம் என்ன?வெட்கம் என்ன?

நாணம் என்ன? வெட்கம் என்ன?
காணும் அர்த்தம் விதந்தான் என்ன?
தோன்றும்போது ஒன்றென மயக்கும்!.
தோண்டும் போது வேறென வியக்கும்!

மலரின் மணமாய் பெண்ணின் நாணம்
மயக்கும் ஈர்ப்பாய் வியப்புறு பாணம்.
வெட்கம் பொதுவாய் துணையாய் இணையாய்
பக்கம் பழகி காதல் புரியும்.

அறிவோம் நான்கு நற்பண்பு பெண்ணுக்கு.
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பென்று.
ஆணுக்கும் அதுபோல் நற்பண்பு நான்கு.
அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்று

பயிர்ப்பும் நிறையும் கற்பெனும் திருவாய்
உயிர்ப்பாய் மொழிவார் இருபால் பொதுவாய்’
அடக்கம் ஒழுக்கம் விழுப்பம் பொருளாய்
அடங்கும் எல்லாம் அறிவாய் அதுவாய்.

வெட்கம் நாணம் விளங்கும் விதமாய்
உட்கும் மானம் துலங்கும் இதமாய்
நாணம் மட்டும் பெண்பால் பொருத்தம்
பேணும் வெட்கம் இருபால் அருத்தம்.

உணர்வில் உயிர்க்கும் வெட்கம் அச்சம்
நினைவில் நிறுத்தும் சத்திய அச்சாம்.
நாணம் தானம் பெண்மைக்கு அழகாய்.
ஊனில் தானாய் உள்ளது பிறப்பாய்`

அந்நியம் கண்டு தன்னியம் கூசும்
பெண்ணியம் நாணம் பெருமை பேசும்.
கண்ணியம் கட்டு மண்ணிய வாசம்
புண்ணியம் அதுவே தமிழ்மணம் வீசும்.

வீரம் தீரம் விளங்கிய தெல்லாம்
ஊறிய வெட்கம் உள்ளுணர்வாலே.
சாரம் அதுவாய் வெட்கம் நாணம்
தேறிய வாழ்வின் பாரிய அருளே!

வெட்கம் விளைவித்த சிந்து நாகரிகம்
பக்கம் ஒதுங்கியதால் பண்பாடு கெட்டதோ!
நாணம் பதிப்பித்த நன்னடை சிங்காரம்
ஊனம் படாமல் உத்தமம் விளங்கட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (7-Feb-14, 5:18 am)
பார்வை : 695

மேலே