விளையாத க’விதை’

வெற்றுத்தாளை வெகுநேரம் வெறித்துப் பார்க்கிறேன்...
மடித்த தாளில் மை ஊறியும் கனத்த உள்ளத்தில் சொல் ஊறவில்லை...
கிழித்தெறிந்த காகிதங்கள் கிலோ கணக்கில் சூழ்ந்திருக்க கிழக்கைத் தொலைத்த வானமென நான் கவிதைதொலைத்து அலைகின்றேன்...
மனம் காய்ந்தே கிடப்பதால் விதைத்த க’விதை’ விளையாமல் போனதோ....?
’அக’விலைப்படி வழங்காததால் நடக்கும் கவிதைகளின் வேலைநிறுத்தமோ...?
பல கவிதைகளின் கரங்கள் காதல்சிறையின் கம்பிகளைத் தாண்டுவதே இல்லை....
அரைகுறைப் புலவரெல்லாம் கறையேறிய கூச்சல்களைக் கவிதைகள் என்றழைக்க...
மறையெனப் போற்றத்தகும் நிறைவான கவிதையொன்றை மனச்சிறையில் காணும் என் புரையோடிய கனவு நிறைவேறும் நாள் வருமோ...?

எழுதியவர் : அங்கயற்கண்ணி (10-Feb-14, 8:28 am)
பார்வை : 55

மேலே