ஏன் நான் கட்டாருக்கு வந்தேனம்மா
உல்லாசமாய் செல்லலாம் என நான் நினைத்து
பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும்
உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி
வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு
என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை
பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன்
பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது
சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு
பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே
ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை
புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன்
பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு
புறவழியாக புரவுகள் யாதும் இன்றியே இங்கு நான்
புழுக்கையாய் படும் வேதனை புரியுமா அங்கு
வலசை போகாதே வருத்தம் தீராதே என்றுணர
நானாக சாக வந்தேனம்மா கட்டாருக்கு
செப்பட்டை எனக்கிருந்தால் சேர்ந்திடுவேன் ஒருநொடியில்
கால்கட்டை அவிழ்த்துவிட யாராவது வந்துவிட்டால்
ஆவலோடு நானிருக்கேன் உறவோடு ஒட்டிக் கொள்ள
நானினி போகமாட்டேன் இந்த நாசமான கட்டாருக்கு
****************************************************************
ஒரு நண்பனின் குமுறல் .
****************************************************************
****************************************************************
புரவு - பாதுகாப்பு
செப்பட்டை - பறவைச் சிறகு
புழுக்கை - அடிமை
வலசை - இடம்விட்டு இடம் போதல்
புரிசை - மதில்
பிரணயம்- அன்பு
புறவெளி- வான்வெளி .
வருணி -பிரம்மச்சாரி
*****************************************************************