என்னவென்று சொல்வதோ
பாரதியை தவிர
மற்றவரிடத்தில் பற்றில்லாத
நான்
உன் சொற்களில்
லயித்து நிற்கிறேன்...
கார்மேகத்தையே கண்டிராத
என் வானம்
முதன்முதலாய்
வானவில்லையே மழையாய்
பொழிகிறது...
இராஜராஜனின் வீர சிலையை
இரசித்த என் கண்கள்
இன்று தாஜ்மஹாலை வர்ணிக்க
வார்த்தை தேடுகிறது...
அறுசுவை விழுங்கிய
என் தொண்டைக்குழி
உன் புன்னகையால்
நெருப்புக் கவளங்களை
விழுங்குகிறது...
என் கையேட்டின்
முதல்பக்கம்
என் பெயர் எழுதியே
பழகிய கைகள்
அனிச்சையாய் உன்
பெயர் எழுதி
செய்வதறியாது திகைக்கிறது...
ஒவ்வொரு நொடியும்
உன்னால் - உனக்காய்
மயங்கி தயங்கி
உளறி குமுறி
நிற்கும்
என் நெஞ்சத்தை
என்னவென்று சொல்வதோ
என் உயிரே!

