என்ன இல்லை எங்கள் நாட்டினிலே

வளநாடெல்லாம் நச்சு வெடியால் சுடலைக்காடாய்ப் புதைந்து
வண்டாடும் மலரொன்று இல்லாமல் வீணாய்ப் போய்விடினும்
விரிந்த நுதலினிலிட்டத் திருநீற்றீன் மணம் சுகம் தரும்

வயலினிலே வளப்பமோடிருந்த நெற்கதிரெல்லாம் செங்குருதியின் தேக்கத்தால்
வாடியே எங்கள் வயிறெல்லாம் பசியெட்டும்போது நாவினில்
வண்டமிழ் அள்ளி தெளிக்கும் அமுதம்
சுவை கூட்டும்

வெள்ளம் பெருக்கெடுத்து எங்கும் கொடுங்குளிர் காலம்
வரும் போழ்தினில் உடுக்க உடையில்லாமல் போனால்
விலைபோகாத தன்மான ஆடை மானம் காக்கும்

வரைகளில் இருந்து ஒழுகிடத் துளிநீரும் இல்லாமல்
வியர்வை யாக்கை எங்கும் சிந்தும் தருணத்தில்
விரோதியின் உதிரத்திலுள்ள ஈரப்பதம் தாகம் தணிக்கும்

வலை விரித்து இழுக்கும் காதல் பூக்கள்
வெந்து கொடுங்காமத் தீயினில் கருகும்போது
வஞ்சியரின் கற்புக்கு எங்குலதெய்வம் கண்ணகி காவலாவாள்

வாஞ்சையுடன் அள்ளி அன்பு பாலூட்டத் தாயில்லாமலே
விக்கி அழும் பாலகனுக்கு எம் தமிழன்னை
'வரலாற்றில் வெற்றி காணடா கண்ணே'யென வீரப்பால் ஊட்டிடுவாள்

வளமையெல்லாம் இருந்த போதும் மற்ற நாடெல்லாம்
வன்கொடுமையிலும் தாய் தேசத்தின் மீது பற்றுகொண்டாடும்
வேங்கைக்கொடி விண்ணாடும் எங்கள் நாட்டிற்கு ஈடாகாதன்றோ?

எழுதியவர் : பா.வாணி (14-Feb-14, 12:52 pm)
பார்வை : 666

மேலே