செம்மொழி பண் - கே-எஸ்-கலை

கனிதரும் பெருமரம் எம்மொழி
நனிவளம் மேவிடும் செம்மொழி !
முனிவரும் பயின்றிட்ட முதுமொழி
தனிப்பெருஞ் சுவைதரும் மதுமொழி !

அதரமும் இதயமும் தமிழ் - அதை
அறிந்திடாத் தமிழனை உமிழ் !
ஆயிரம் பாயிரம் அகழ் - அதில்
அறிந்திடுவாய்த் தமிழ்ப் புகழ் !

சிறுமைகள் கண்டு வாடாத் -தனிப்
பெருமைகள் கொண்ட தமிழில்,
வறுமையைக் கொண்டு வாரா-நற்
திறமையைக் கொண்டு வாடா !

தினம்தினம் மலரும் தமிழால்
மனம்தினம் புலரும் மகிழ்வால் !
தனம்கனம் கொண்ட வரத்தால்
தமிழ்வனம் வளரும் தரத்தால் !
=============================
சொற்சுவை கொண்ட வரத்தால்
சூழ்பகை வெல்லும் திறத்தால்
தினம்தினம் மலரும் தமிழால்
மனம்தினம் புலரும் மகிழ்வால் !
=============================
திக்குகள் எட்டும் எட்டும் - தித்
திப்புகள் நெஞ்சில் கொட்டும் - எம்
வக்குகள் வானை முட்டும் - புது
மொக்குகள் தேனைச் சொட்டும் !

அவைதனில் பலமொழி புழங்கும்-அவ்
அவையினில் பழமொழி முழங்கும் !
சுவையினில் பழமொழி ஓங்கும்-அதைச்
சுவைத்திடப் பலமொழி ஏங்கும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (14-Feb-14, 7:59 pm)
பார்வை : 1634

மேலே