சீதா திரௌபதி காவிய நாயகி
சீதா திரௌபதி காவிய நாயகி
மண்ணைத் தோண்ட வந்தவள் சீதை
யாகத் தீயில் எழுந்தவள் திரௌபதி
சீதை பிறந்தாள் சிசுவின் வடிவில்
திரௌபதி அவளோ யுவதியின் உருவில்
இருவரும் ராஜ குமரிகள் ஆயினும்
இருவர் வாழ்விலும் வந்தன இடர்கள்
எடுத்த வில்லை உடைத்தான் ராமன்
விடுத்த அம்பால் வென்றான் விஜயன்
வீரர் பலரிரு ராஜ சபையில்
விதியும் செய்தது சதியும் ஒன்று
தந்தையின் மானம் காத்திட ராமன்
கானகம் செல்லத் துணிந்த உடனே
அவன்பின் சென்றாள் சீதா பிராட்டி
திருமண மாலை வாடும் முன்னே
அன்னை குந்தி சொல்லைக் கேட்டு
திகைத்து விஜயன் நிற்கக் கண்டு
வேத வாக்காய் மனதிற் கொண்டு
திரௌபதி பெற்றாள் கணவர் ஐவர்
விதியும் செய்த சதியோ இதுவும்
சீதை தனிமையில் இருக்கக் கண்டு
மையல் கொண்டு கடத்திச் சென்று
சிறையில் வைத்தான் அசோக வனத்தில்
சீதை சம்மதம் தந்தால் இராவணன்
திருமணம் செய்ய நினைத்தான் அன்று
அந்தப் புறத்தில் தனிமையில் இருந்த
திரௌபதி அவளை ராஜ சபையில்
பணயம் வைத்திழந்தார் தர்மர் என்று
இழுத்து வந்து பலர்முன் நிறுத்தி
துகிலுரித்தான் துச்சாதணும் வெட்கங் கெட்டு
சிந்திய கண்ணீர் கரைபுரண் டோடி
நனைத்தது மார்பிரு மாங்கனி இரண்டு
ஐந்து பதிகள் அவளுக் கிருந்தும்
உடுக்கை இழக்கும் தருணம் அங்கு
ஒருவரும் உதவிட முன்வர வில்லை
பெண்ணின் மானம் காத்திடல் வேண்டும்
என்றே கூறி இருகரம் கூப்பி
சரணா கதியில் சிரம்மேல் உயர்த்தக்
கண்ணன் வந்து விந்தை புரிய
உருவிய ஆடை குவிந்தது மலைபோல்
கற்றோர் பலரும் வீற்றிரு சபையில்
கண்ணிலா மன்னன் அரியணை மீதில்
தன்னை இழந்தபின் கணவன் எங்ஙனம்
மனைவியை பணயம் வைத்தது நீதி
என்று வினவ சொன்னான் கண்ணன்
துகிலை உரித்தவன் எலும்பை முறித்து
குருதியில் கூந்தல் முடிப்பேன் என்று
அவையோர் முன்னில் கண்கள் சிவக்க
கனலைக் கக்கி தலைமுடி விரித்து
சபதம் எடுத்தாள் அக்னிபுத்திரி நின்று
இடிபோல் முழங்கிய கேள்வியின் அதிர்வில்
எழுந்து நின்று விதுரர் அவையில்
விடுத்தார் அறிவுரை ஒன்றை ஆங்கு
சூதில் இழந்த பொன்னும் பொருளும்
அனைத்தும் உடனே கொடுத்திட வேண்டி
பெண்ணின் மானம் காக்கத் தவறிய
மன்னர் ஆயினும் வீழ்ந்தார் மண்ணில்
என்றே நாமும் பார்த்திடல் வேண்டும்
காதலர் தினத்தைக் காரணம் காட்டி
கற்பை இழந்திட வேண்டாம் பெண்டிர்