வளமென்ன இனிவேண்டும்
வளமென்ன இனிவேண்டும்?
பொன்னே பூச்சரமே புன்னைமர இளங்காற்றே
கண்ணே கண்மணியே காலையிளங் கதிரொளியே
பெண்ணே பெண்ணரசே பேசுமொழி சித்திரமே
எண்ணே என்மகளே எழுந்துவா என்னிடமே
தந்தைநான் தவமிருந்து தனித்துவரம் பெற்றேனே
எந்தைவழி பேரெடுக்க உந்தாயில் கண்டேனே
முந்தைநாள் நான்தந்த முத்தங்களை சேர்த்துவைத்து
இந்தைநாள் மொத்தமாய் இன்பமுனைத் தந்தாளே!
ஆழ்ந்தயெம் தேடலிலே அதுமுத்தாய் பிறந்தது.
வாழ்ந்தயெம் வாழ்க்கையுன்னால் வரலாறாய் மலர்ந்தது
தேர்ந்தயெம் பந்தமிது தேனாகிக் கனிந்தது
நேர்ந்தயெம் நன்மையெல்லாம் நீயாகி வந்தது.
குலம்செய்த புண்ணியமோ குலமகளேநீ கிடைத்தாய்.
நலமெல்லாம் நீயென்றே நாம்வாழ அறம்படைத்தாய்.
வளமென்ன இனிவேண்டும் வள்ளலே வந்துவிட்டாய்
பலமென்ன பெறவேண்டும் படையேநீ தந்துவிட்டாய்,
கொ.பெ.பி.அய்யா