உன்னை அறிந்தால் ஞானத் தேடல்

என்னை அறிந்திடும் எண்ணம் கொண்டு
கண்களை மூடி நான் தியானம் செய்தேன்
யோக ஆசனப் பயிற்சிகள் செய்து
சோகம் மகிழ்ச்சியின் தாக்கம் துறந்தேன்.

‘சோ’வென்ற உள்மூச்சுக் காற்றின் ஒலியும்
‘ஹம்’மென்ற வெளிமூச்சுக் காற்றின் ஒலியும்
‘ஓம்’ என்ற வாய்வழி ஓங்கார மந்திரத்தில்
‘தோம்’ எனும் சச்சி தானந்தம் புரிந்தேன்.

சகலரும் அறிந்திடத் துடிக்கும் அந்த
அகம் பிரம்மாஸ்மி என்பதன் பொருளை
தகதகப் பேரொளி அண்டத்தின் துளியென
சுகமாய் அடையாளம் கண்டு வியந்தேன்.

அயம் அதுவே பிரம்மம் என்றால்
அயம் ஆத்தும பிரம்மம் ஆகும்
புத்தி அதுவும் பிரம்மம் ஆயின்
சத்தியம் அறியும் சத்தியும் ஆகும்.

சிரமம் இதிலே புரிவதில் என்றால்
பிரபஞ்சம் அனைத்தும் பிரம்மம் ஆனதால்
தெய்வீகம் அதிலே பங்குண்டு நமக்கும்
பெய்வது இறையருள் மழையென அறிந்தேன்.

எல்லாம் முடிந்த காரியம் என்றும்
பொல்லாப்பு ஏதும் இங்கில்லை என்றும்
சொல்லாமற் சொல்லும் சாத்திரக் கூற்றை
எல்லா மனிதரும் ஏற்றிடக் கண்டேன்.

தத்துவ மஸியைத் தரணிக்கு உரைத்தது
சித்ததுள் நின்று சிறக்கும் சிந்தையே
நீயே அதுவென உணரும் வேளையில்
தீயும் நீரும் ஒன்றென்று உணர்ந்தேன்.

மெய்த்தவம் பூண்ட ஞானியர் வாக்கெலாம்
எய்திட இயலுமோ அறிவால் என்றெண்ணிட
தடுத்திடும் வகையில் துணைவியின் அழைப்பு
படித்தது போதும் படுக்கைக்கு வாவென்றே.
.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (18-Feb-14, 11:38 am)
பார்வை : 110

மேலே