அணைப்பில் எழுவது துயரா மகிழ்வா

பாரணைக்க நதிகுதித்துப் பாயுதம்மா - அது
போயணைக்க கடலைநாடி ஓடுதம்மா
வேரணைத்த நிலம்நெகிழ்ந்து விட்டதம்மா - அதில்
வீறெடுத்துச் செடி வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட உழுதமண்ணும் - இன்று
ஏற்றமுடன் நெல்சுமந்து நிற்குதம்மா
யாரணைக்க நாம்பிறந்து வந்தவரோ - பட்ட
நாட்கள்தனும் துயரணைத்த தேனோஅம்மா

போரணைக்க வாழ்வணைந்த பூமியதில் - ஏன்
போதணைத்த தாய்கரத்தில் போய்ப் பிறந்தோம்
மாரணைத்துப் பால் குடித்த இன்பமெலாம் - இன்று
மாறியெம்மை தீதணைத்த காட்சியம்மா
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
நேரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்த
நீதியற்ற விதியணைத்த கோலமென்ன

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற் றின்கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதம்மா
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரணைந்து வாழ்வதன்றி வேறு வகை - இங்கு
நீசரெங்கள் நிலமணைக்க வேண்டுவதோ

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த சாவுகளும்
நீறணைந்துத் தீயழிக்க விட்டதுமேன் - எம்மை
நேரனைத்துத் துன்பங்களும் சார்வதுமேன்
சேறணைத்த மண்விளைந்த பூக்களைப்போல் நாமும்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

எழுதியவர் : கிரிகாசன் (19-Feb-14, 5:23 am)
பார்வை : 55

மேலே