வேண்டும் மனிதம்
மனிதம் சிதைந்தது
சமாதான யுத்தத்தில்
முள்வேலிக்குள்
அடிமைகளாய் அடைபட்டோம்.
மனிதநேயப் போர்வையில்.......
கிறிஸ்தவம் வந்தது
ஆண்டவருடன் இணையுங்கள்
ஆசீர்வதிப்பார் என்றது.
இஸ்லாம் வந்தது
அல்லாவே அனைத்தும்
மறுமையில் தருவான்
சுவனம் என்றது.
நான் வணங்கும் கடவுள்
என்னைக் கைவிடவில்லை
எக்காளத்துடன் வந்தது
இந்து மதம்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார் என்றது.
புத்தனும் வந்தான்
போதிமரங்கள் இல்லாததால்
எமது புதை குழிகளின் மேல்
கண் மூடி மவுனமானான்.
இறை மறுப்பாளர்கள் வந்தனர்
"கடவுள் இருந்தால் நல்லது " என்று
கண்ணீரோடு விடை பெற்றனர்.
நாங்கள்
மனிதர்களையும் .....
மனிதநேயத்தையும் ........
எதிர்பார்த்து இருக்கிறோம்
வரும்போது
எங்களுக்கான
சுய நிர்ணய உரிமைகளையும்
கொண்டு வாருங்கள்.
எங்கள்
முள் வேலிகளிலும்
பூக்கள் பூக்கட்டும்.