விலையில்லாப் பொருட்கள்சிறு கதை

வீட்டு வேலை முடிந்து இப்போதுதான் வீட்டுக்கு வந்தாள் தனலட்சுமி.கையில்தான் லட்சுமி இல்லை.மகளின் பெயரிலாவது இருக்கட்டுமே என்று அவள் அப்பா வைத்த பெயர்.ஆயிரம் கஷ்டங்களுக்கு மத்தியில் அவளை ஆறுமுகத்துக்குக் கட்டிவைத்தனர்.
ஆறுமுகமும் கடும் உழைப்பாளிதான்.ஒரு பவுண்டரியில் தினமும் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குபவன்.மனைவியுடன் மிகவும் அன்பாகவே இருந்து வந்தான். விற்கிற விலை வாசியில் ,வீட்டு வாடகையிலிருந்து,மளிகைப் பொருட்கள் வரை வாங்க அவன் ஒருவனது சம்பளம் பத்தாத காரணத்தால் அவளும் ஒரு செட்டியார் வீட்டில் வீட்டுவேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள் தனா.

செட்டியாரம்மா மிகவும் கஞ்சத்தனம் உடையவள்.காலை எட்டு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை வேலை கொடுத்துப் பிழிந்தெடுத்து விடுவாள்.ஒரு காப்பியாக இருந்தாலும் சரி ,வேறு தின் பண்டமாக இருந்தாலும் சரி.அவர்களால் சாப்பிடமுடியாதது எதுவோ அதை மட்டுமே தாராளமாக தனத்துக்குக் கொடுப்பாள்.மேலும் அவளிடம் ஒருநாள் விடுமுறை போட்டாலும்,கறாராகக் கணக்குப் பார்த்து சம்பளத்தில் கை வைத்து விடுவாள்.

ஆறுமுகம்,தனா,இருவருமே வேலைக்குச் செல்வதால் உழைத்துக் களைத்து,தினமும் எட்டு மணிக்குமேல்தான் வீட்டுக்கு வர முடிகிறது வந்தவுடன் இருவருமே சாப்பிட்டு விட்டு,சற்று நேரம் பேசக் கூட இயலாமல் அயர்ந்து தூங்கி விடுவார்கள்.

ஆரம்பத்தில் இது ஒரு பெரிய குறையாக தோன்றாவிடினும்,நாளாக நாளாக ஆறுமுகத்துக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாதது போல் தோன்ற ஆரம்பித்தது.கூடவே இதை எண்ணி எண்ணி குடிப் பழக்கத்துக்கும் ஆளானான்.சம்பாதிக்கும் நானூறு ரூபாயில் 200 ரூபாய் அவனின் குடிச் செலவுக்குப் போகவே மற்ற செலவுகளுக்கு திண்டாட ஆரம்பித்தாள் தனலட்சுமி.இதனால் அவர்களுக்குள்
அடிக்கடி சண்டை வரவே,பல நேரங்கள் அவள் அழுதபடி ,சாப்பிடாமல் கூட உறங்கிப் போவாள்.

இந்த நிலையில்தான் நாளை ரேஷன் கடையில் முதலமைச்சரின் மிக்சி,கிரைண்டர் ,போன்ற விலையில்லாப் பொருட்கள் தரப் போவதாக வீட்டுக்காரம்மா சொன்னார்.அதற்கு ரேஷன் கார்டுடன் காலை 6 மணிக்கே சென்று லைனில் நின்றால்தான் டோக்கன் வாங்கி பொருட்களை வாங்கமுடியும் என்றும் கார்டில் உள்ளவர்கள் இருந்தால்தான் பொருட்கள் கிடைக்கும் என்று சொன்னார்கள்.உடனே தான் வேலை செய்யும் செட்டியாரம்மாவின் கையில் காலில் விழுந்து ,ஒருநாள் சம்பளம் போனாலும் பரவாயில்லை என்று லீவு போட்டு விட்டு வந்தாள்.

எட்டரை மணியளவில் அரைகுறைப் போதையுடன் வந்த ஆறுமுகத்துக்கு சாப்பாடு போட்டுவிட்டு அவனையும் நாளைக்கு வேலைக்குப் போகவேண்டாம் என்றும் ,காலை ஆறு மணிக்கே ரேஷன் கடை போக வேண்டும் என்றும் கூறினாள்.இலவசப் பொருட்கள் வீடு வருமே என்பதால் அவனும் ,நானூறு ரூபாய் போனாலும் பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டான்.

இருவரும் ஐந்து மணிக்கே எழுந்து காப்பி மட்டும் குடித்து விட்டு லைனில் நிற்கக் கிளம்பினர்.அங்கு சென்று பார்த்த பிறகுதான் அதற்கு முன்பே லைன் ஒரு கிலோமீட்டருக்கு மேல் சென்றுவிட்டதை உணர்ந்து ,பரவாயில்லை என்று தாங்களும் நின்றுகொண்டனர்.

அப்போதுதான் ,தெரிந்தது.சிலர் இரவு பத்து மணிக்கே வந்து கொசுக்கடியில் படுத்திருந்துதான்
தங்களுக்கு முன் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று.எனினும் தங்களுக்குப் பின்னாலும் நிறைய பேர் வந்து லைனில் சேர்ந்தபோது இவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.

ஒன்பது மணிக்கு மேல் அதிகாரிகள்,மற்றும்,
மாமன்ற உறுப்பினர் வந்த பின் டோக்கன் கொடுக்க ஆரம்பித்தார்கள்.அதற்குள்ளாகவே இருவருக்கும்
நின்று நின்று கால்களும் ,இடுப்பும் வலிக்க ஆரம்பித்தது.வேறு வழியில்லை இன்று நிற்க வில்லை என்றால் இந்தப் பொருட்கள் கிடைக்காமலே போய்விடலாம் என்று ஒருவர் பயமுறுத்தினார்.ஒருவர் டி.வி.எஸ்.வண்டியில் ஒரு கேன் நிறைய காப்பியுடன்,ஒரு பையில் வடை,போண்டா போன்றவற்றை இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி விற்றுக் கொண்டிருந்தார்.ஆமைபோல் நகரும் கூட்டத்துக் கிடையில் ஒரு நாய் யாரையோ தொலைத்து விட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது.தன எஜமானாரைக் காண இயலாமல் கால்வலியுடன் சோர்ந்து படுத்தது.

நேரமாக,நேரமாகக் கூட்டமும் நிறைய சேர்ந்து அனுமான் வால்போல் வரிசை நீண்டு கொண்டே போனது.முன்னே சென்ற பத்துபேர் பெரிய சாதனை முடிந்த திருப்தியுடன் முதல்வர் படம் போட்ட மூன்று பெட்டிகளுடன் வெளியே வந்தனர்.ஏற்கனவே காத்திருந்த ஆட்டோக் காரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு பொருட்களை வண்டியிலேற்றி நூறு ரூபாய் பெற்றுக் கொண்டு
பறந்து கொண்டிருந்தனர்.

நேரம் பன்னிரெண்டை நெருங்கும்போது தனாவுக்கும்,ஆறுமுகத்துக்கும் பசி தாங்காமல்,ஆளுக்கு இரண்டு போண்டாக்களை வாங்கிச் சாப்பிட்டனர்.இவர்களுக்கு முன் இன்னும்
ஒரு ஐம்பதுபேர் இருக்கையில் கூட்டத்தில் புதிதாக
வாங்கிய கார்டுகளுக்கு இன்று தரமாட்டார்கள் என்று ஒருவர் கொளுத்திப் போட இருவருக்கும் சற்றுக் கலக்கம் ஏற்பட்டது.ஒரு மணிக்கெல்லாம் அதிகாரிகள் சாப்பிடப் போய்விட ,அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் நிறையப்பேர் வெய்யிலிலே தெருவில் உட்கார்ந்தனர்.மற்ற நாட்களில் அந்தத் தெருவின் லட்சணத்தை அனைவருமே பார்த்தவர்கள்தான் என்றாலும் கால்வலி தாங்காமல் அங்கேயே உட்கார்ந்தனர்.

இரண்டு மணிக்கு சரியாக அதிகாரிகள் வந்து மீண்டும் வேலையை ஆரம்பித்தபோதும் கால்களின் கெஞ்சல் தாங்காமல் நிறையப் பேர் உட்கார்ந்தபடியே இருந்தனர்.ஒருவழியாய் தனாவும்,ஆறுமுகமும் உள்ளே நுழைந்தபோது மணி மூன்றரை ஆகி இருந்தது.

கம்ப்யுட்டரில் இவர்களின் கார்டு எண்ணைக் கொடுத்து அதிகாரிகள் பார்த்துவிட்டு இலவசப் பொருட்கள் கிடைக்கும் என்று கூறியதும் இருவர் முகமும் பிரகாசமாயிற்று.

ஒருவழியாகப் பொருட்களை வாங்கிவிட்டு
ஆட்டோவுக்கு எதற்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இருவரும் கஷ்டப் பட்டுத் தூக்கிக் கொண்டு வீடு வந்த போது,மணி ஆறு ஆகியிருந்தது.

உடனே ஒரு டம்ளர் அரிசியை குக்கரில் வைத்து தயிர் போட்டு இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.தனாவுக்குத் தூக்கம் வருவதுபோல் இருந்தது.ஆறுமுகத்துக்கோ தினமும் குடித்துப் பழகியதால் தூக்கம் வரவில்லை.வரிசையில் நின்ற வலியும் சேர அவளிடம் இருந்த நூறு ரூபாயைக் கெஞ்சி வாங்கிக் கொண்டு சாராயக் கடைக்குச் சென்றுவிட்டான்.

அன்று ஒரு நாள் இருவரும் லீவு போட்டதால்
ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்குப் போட்டபடி,இப்படி இலவசங்களைக் கொடுக்கும் அரசு இந்த மதுபானக் கடைகளை மூடினால் எவ்வளவு நன்றாகிருக்கும் ?
என்று எண்ணியபடி தூங்கிப் போனாள் தனா.

இந்த மது பானக் கடைகள் மூலம் வருகின்ற வருமானத்தால்தான் இப்படி இலவசங்கள் கொடுக்கிறார்கள் என்கிற உண்மை அவளுக்கு எங்கே புரியப் போகிறது?

எழுதியவர் : கோவை ஆனந்த் (21-Feb-14, 11:03 pm)
பார்வை : 198

மேலே