ஓடித் தொலைத்ததும் ஓய்ந்து சேர்த்ததும்

இது நாள் வரை..

வறுமை தொலைக்க
பொருள் தேடித் திரிந்தேன்.
பெருமைசேர்
செயல்நாடி அலைந்தேன்.

ஒருபொழுதும் நிற்காமல்
ஓடிச் சேர்த்தது கொஞ்சம்.
ஓடித் தொலைத்தது பல.

நட்பின் நெருக்கம்
உற்றார் அணுக்கம்
உறக்கம் உடல்நலம்
வானவில் சிதறலாய்
வாழ்வில் வந்துபோன
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
அநுபவங்கள்..

சேர்த்ததை எண்ணிவிட
கைவிரல்கள் போதும்.
கைநழுவிப் போனது
கணக்கெடுக்கவியலாது.

ஓடுவதை நிறுத்தினேன்
ஓடுங்கியது ஆசை.
தேடுவதை நிறுத்தினேன்
கைசேர்ந்தது அமைதி.

ஓடியோடித் தேடியவை
ஒருநாளுந் தராத இன்பம்
ஓய்ந்து நின்ற பின்
உள்ளுக்குள் நிறைவது கண்டேன்.

வெளிப்பொருளில்
நாட்டம் குறைய
வெளிப்போந்தது
மனவெளிப் புதையல்.

இப்பொழுது..

நேற்றும் நாளையும்
நினைவிலில்லை.
இக்கண வாழ்வே
முக்கியமானது.

அலைச்சல் குறைந்திட
இரைச்சல் மறைவதும்
கரைச்சல் போவதும்
கண்கூடானது.

தேவைகள் சுருங்கிட
ஆசைகள் அருகிட
மிச்சமிருக்கும் காலம்
அச்சமின்றி கழியும்.

ஆட்டம் அடங்க
அமைதி பெருகுது
நாட்டங் குறைய
நிம்மதி துலங்குது.

எண்ணம் வாக்கில்
வண்ணங் கூடுது.
பண்ணுஞ் செயல்களில்
படருது மகிழ்ச்சி.

நீரும் என்போல்
நெரிபட வேண்டாம்.
காலங் கழித்து
தெளிவுற வேண்டாம்.

திண்ணமாய்த் தெரிவதை
உண்மையாய் உணர்ந்ததை
உவப்புடன் உரைத்தேன்
உம் நலனுக்காக.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (22-Feb-14, 10:49 pm)
பார்வை : 60

மேலே