மெட்ரோ இரயில் அழைக்கிறது

சோதனை ஓட்டம் ஓடுகின்றேன்
வேதனை நீக்கிடவே வருகின்றேன் !
போதனை இல்லை கேளுங்கள்
சாதனை படைக்க வருகின்றேன் !

காத்திருந்தேன் பலதிங்கள் நானும்
கடல் கடந்து வந்திங்கு உதவிடவே !
ஆண்டவரோ என்னையே விரும்பினர்
ஆள்பவரோ ஒதுக்கிடவே நினைத்தனர் !

பேருந்து பயணமோ நம் சென்னையில்
பெரிதும் கடினம் நாளும் பொழுதும் !
பயணிக்கும் சாலையோ இன்றும் சிறிது
பயணம் செய்வோரோ என்றும் பெரிது !

விரும்பிய இடத்தை சென்றடைய
விரைவாய் அடைந்திடவே என்தடம் !
வியர்வைத் துளிகள் அரும்பாமலே
விண்ணில் செல்வேன் ததும்பாமலே !

மாசில்லா சுவாசமுடன் நம் பயணம்
தூசில்லா சூழலுடன் நம் பயணம் !
ஆறுதலாய் ஓடிவந்தேன் என்றாலும்
தேர்தலுக்குள் முடியாது என்னாலும் !

செவ்வாய் கிரகத்திற்கே கால்பதிக்க
செந்தமிழன் தயார் நிலையில் இருந்தும்
செவ்வாய் மலர்ந்திட வேண்டும் இங்கே
சொற்போர் அரசியல் நிலையும் இங்கே !

சந்திப்பேன் நானும் ஒருநாள் உங்களை
பயணிப்போம் நிச்சயம் நாம் இனைந்து !
அந்நாள் வரும்வரை நாம் காத்திருப்போம்
பொன்னாளை எண்ணி மகிழ்ந்திருப்போம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Feb-14, 7:50 pm)
பார்வை : 155

மேலே