இளைஞனே எழுந்து வா
அந்த மைதான அரங்கிலே இளைஞர் எழுச்சி மாநாடு ஆரம்பமாக இருந்தது. அப்போது முதியவர் ஒருவர் இளைஞர்கள் இடையே வந்து அமர்ந்தார்.இதை பார்த்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவன் "இந்த வயசுலயும் கிழவனுக்கு கிடகிடப்பு இல்ல, மனசுல பெரிய மன்மத ராசாண்ணு நினைப்பு"வணக்கம் என்றான். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அந்த முதியவர் எதையும் சட்டை செய்யாமல் போய் இருக்கையில் அமர்ந்தார். சற்று நேரத்தில் மாநாடு ஆரம்பித்தது. பேராசிரியர் ஒருவர் சொற்பொழிவுஆற்றினார்."இளைஞர்கள் நாட்டின் தூண்கள்,போராடும் குணம் கொண்டவர்கள்.அவர்கள் நினைத்தால் நாட்டையே மாற்ற முடியும்,இளைஞர் சக்தி அபார சக்தி"-இதையெல்லாம் உடலில் ஆவி பறக்க கேட்டுக் கொண்டிருந்தனர் இளைஞர்கள்.இறுதியில் பேராசிரியர் தன் சொற்பொழிவின் உச்சகட்டத்தில் இந்த நாட்டில் நடக்கும் சமூக அநீதிகளை தட்டிக் கேட்க துடிப்பு மிக்க இளைஞர்கள் தேவை.அதற்காக ஆரம்பிப்பது தான் இந்த இளைஞர் எழுச்சி இயக்கம். துடிப்பும் சமூகப்பற்றும் நிறைந்த இளைஞர்கள் இந்த மேடைக்கு வாருங்கள் என்றார்.இளைஞர்கள் ஒருவரையொருவர் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் மட்டும் கூட்டதில் இருந்து மேடைக்கு ஏறிச் சென்றார்.இளைஞர்கள் அத்தனை பேரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, "நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன்" என்றார் அந்த முதியவர்.இளைஞர்கள் கூனிக்குறுகி போய் உட்கார்ந்திருந்தனர். அப்போது," இளைஞனே எழுந்து வா" என்று குரலுயர்த்தி அழைத்தார் முதியவர். மறு நிமிடம் , இருக்கைகள் வெறிச்சோடியது மேடை நிரம்பியது . அந்த முதிய இளைஞனுக்கு தன் கண்களாலே நன்றி கூறினார் பேராசிரியர்.