நான் உமா மகேஷ்வரி பேசுகிறேன்
என் முடிவைக் கண்டு,
தாங்க முடியாத துயரம் கொண்டு,
கண்ணீர் சிந்தும் - என்
தோழர் தோழியர்க்கு,
நன்றி தெரிவிக்க - கண்ணீரையே
காணிக்கையாக்க நினைத்தேன்.
ஆனால் கண்களில் நீரின்றி,
தேகம் அழுகிபோய்,
காய்ந்து கிடந்தேன்.
ஆத்தூரில் பிறந்த,
ஒரு வறுமைக் கோட்டின்மேல்,
தத்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த,
சாதாரணப் பெண் நான்.
ஆசிரியர் மகளானதாள்,
ஆர்வமாய் பயின்றேன்.
பள்ளிக் கல்வி கடந்து,
ராசிபுரத்தில் கல்லூரி அடைந்தேன்.
சாதுர்யம்,
சாமர்த்தியம் அறியாத,
ஒரு சராசரிப் பெண் நான்.
பெரிய கனவுகளோ,
புரட்சிகரமான சிந்தனையோ,
நாட்டு நடப்போ,
இப்படி எதுவும் அறியாத,
அடுப்பங்கறைப் பெண் நான்.
கிடைத்த கல்லூரி படிப்பை,
குறைவின்றி கற்றுத்தேறி,
மிகநல்ல நிறுவனத்தில்
சேர்ந்தேன்.
வேலையில் சேர்ந்த முதல் நாள்,
சொர்க்கத்தில் மிதந்த ஒரு பூரிப்பு.
வானுயர்ந்த கட்டிடம்,
சுத்தமான சுற்றுச்சூழல்,
கண்ணாடிச் சுவர்கள்,
கலர் கலர் பூக்கள்,
பாதையோரம் புல் விரிப்புகள்,
ஆங்காங்கே நீர் சுனைகள்,
ஆரோக்கியமான காற்று,
சிரித்து சிரித்து பேசிக் கொள்ளும்,
அலுவலர்கள்.
இவையனைத்தும் என்னை
கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.
என் கனவு,
லட்சியம்,
ஆசை ஒன்றே ஒன்று தான்.
குடும்பக் கடனை அடைப்பது.
அடைத்தபின் பெற்றோரின்
வாழ்வாதாரத்தை சிறிதாவது,
உயர்த்துவது.
மூன்று மாத பயிற்சி காலம்
பக்குவமாய் முடிந்தது.
பயிற்சி பெற்ற என்னை,
பணியில் அமர்த்தினர்.
மாதச் சம்பளத்திலிருந்து,
ஒவ்வொரு காசையும்,
பார்த்து பார்த்து சேமித்தேன்.
அனாவசிய செலவுகளை
அறவே துறந்தேன்.
ஆட்டோவில் செல்வது கூட,
ஆடம்பரச் செலவென்று கருதி,
தவிர்த்தேன்.
நான்கு மாதங்கள்,
நன்றாகவே சென்றது.
சம்பவத்தன்று,
அலுவலக வேலையை
முன்னமே முடித்துவிட்டு,
கேட்டைத் தாண்டினேன்.
இரவு 10:30,
அரசு பேருந்திற்கு அரை
மணி நேரம் காத்திருக்க மனமின்றி,
மெயின் ரோடு செல்ல
இரண்டு கிலோமீட்டர் தூரம்,
கடக்கத் தயாரானேன்.
ஆட்டோவும் அனாவிசையச்
செலவாய் பட்டதால்,
காலார நடந்தேன்.
மங்கிய தெருவிளக்குகள்,
நடை பாதையை மங்கலாய்
காட்டியது.
தலைகுனிந்த படி,
வேகத்தை கூட்டியபடி
நடக்கும்போது.
தீடீரென்று நடைபாதையை
நால்வர் மறைத்தனர்.
திடுக்கிட்டு நிமிர்ந்தேன்,
புரியாத பாஷையில்
பேசத் துடங்கினர்.
ஒன்றும் புரியவில்லை,
உடல் நடுக்கம் கண்டது,
கண்ணீர் கறை புரண்டோடியது,
செய்வதறியாமல்,
ஆ! என்று அழ ஆரம்பித்த என்
வாயை துணி கொண்டு
அடைத்தனர்.
ஒருவன்,
என் கைகளை பின்தள்ளி,
கயிறால் கட்டினான்.
பதட்டத்தில்,
உடலை உதறி உதறி,
துடிக்கிறேன்.
ரோட்டில் குறுக்கும்,
நெடுக்கும் யாருமே இல்லை.
என் ஆசை அலுவலகம் மட்டும்,
அதே பொலிவோடு,
பேரொளி வீற்றிருந்த,
பூதாகார பட்டாம் பூச்சி போல்,
இந்தக் காட்சியை,
கண்கொட்டாமல் பார்த்தபடி,
மௌனித்து இருந்தது.
திகில் திரைபடத்திற்கே,
தாங்காத என்னை,
தர தரவென,
இருட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.
அதிர்ந்து பேசினாலே,
பயத்தில் சுருங்கி விடும் என்னிடம்,
காட்டுத் தனமாய் கத்துகின்றனர்.
வீட்டில் கூட செல்லப்
பிராணி வளர்த்ததில்லை.
விலங்குகளும் பயமே.
இங்கு வேலைபார்பவர்களும்,
கட்டிடத் தொழிலாளிகளும்,
மனிதர்களென்று எண்ணி இருந்தேன்.
இன்று தான் புரிந்தது,
கொடூரமான விலங்குகளும் வேலை
பார்கிறதென்று.
குறைந்த கூலிக்கு அடிபணிந்தால்,
கட்டிடக் காண்டிராக்டர்கள்,
சிங்கம், புலியைக் கூட,
வேலைக்கு அமர்த்துவார்கள்.
மதி கெட்ட
விலங்குகளைப் போல்,
புதருக்குள் இழுத்துச் சென்றனர்.
ஏதேதோ அரங்கேறியது...............
........................................................
........................................................
இப்போது மெல்ல மெல்ல,
என் உயிர்,
என்னை விட்டு.
என்னைக் கவர்ந்த
பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்த
பல பல பட்டாம் பூச்சி
நிறுவனத்தை விட்டு.
உயர உயர மேலே சென்று,
காற்றில் கரைந்து போனது.
பெரும்பாலானோர்,
தவறு ஏன் மீதே சுமத்துகின்றனர்.
தனியாக சென்றது தவறாம்.
டெல்லியில் தானே
பயங்கரம்!
நான் தமிழ் நாட்டில்,
கலவரமில்லாத பகுதியில்
தானே இருக்கிறேன்,
என்று அப்பாவியாய்
இருந்துவிட்டேன்.
தவறென்றும் உணர்ந்துவிட்டேன்.
மன்னித்து விடுங்கள்.
இனியாவது,
பெண் பணியாளர்களே !
இரவு நேரங்களில்,
தனியாக செல்லாதீர் !!!
மாமிச வெறியர்கள்,
மனித ரூபத்தில்,
எங்கெங்கிலும்,
பறந்து, விரிந்து,
பரவிக் கிடக்கின்றனர்.
மாட்டிக் கொண்டால்,
மயானம் உறுதி !!!
அலுவலகமும்,
அரசாங்கமும் அவரவர்,
கடமையை கண்டிப்பாகச்
செய்வர்.
உன் உயிர் பிரிந்தாகி
விட்டதென்று,
உறுதி செய்த பின்.
ஜாக்கிரதை!!!