தமிழ் எண்களை அறியாத் தமிழர்கள்

தமிழ் மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் எத்துணைப் பேர் தமிழ் மொழியில் எண்கள் உள்ளன என்பதனை அறிவர்? அப்படியே தமிழில் எண்கள் உள்ளன என்னும் தகவலினை அறிதவர்களில் எத்துணைப் பேர் அவ்வெண்களை அறிவர்?

தமிழகத்தின் அண்டை மாநிலம் ஒன்றில் வாழும் தமிழ்ப் பெண்ணான நான் நாள் தோறும் நான் வாழும் நகரத்தில் ஓடும் மாநகரப் பேருந்துகளைக் காணும் போது அப்பேருந்துகளின் பெயர் மற்றும் எண்களைத் தாங்கி வரும் ஒவ்வொரு பலகையிலும் பேருந்துகளின் எண்கள் அம்மாநிலத்தின் ஆட்சி மொழியிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.

ஆதலால், அம்மொழியினை முறையாகக் கற்காத வெளிமாநிலத்துப் பெண்ணான என்னால் கூட அம்மொழியிலுள்ள எண்கள் அனைத்தையும் எளிதில் கற்க இயன்றது.

மேலும் எனக்குத் தெரியவந்த மற்றுமொருத் தகவல் யாதெனின் இம்மாநில மொழியினைப் பயிலும் பிள்ளைகள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி நிலையிலேயே அம்மொழியின் எண்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு நிலைமை இவ்வாறு இருக்க நல்ல கல்வி அறிவு பெற்றத் தமிழர்கள் கூட தமிழில் எண்கள் உள்ளன என்னும் அடிப்படைத் தகவிலினைக் கூட அறியாமல் உள்ளனர்!!

நான் தொடக்கப் பள்ளியிலிருந்து இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டு வரை முறையாகத் தமிழ்ப் பயின்றேன். ஆயினும் நான் தமிழ் எண்களை எந்தத் தமிழ் ஆசிரியரிடமோ அல்லது பேராசிரியரிடமோ கற்கவில்லை. நான் என் விடா முயற்சியாலும் கடவுளின் நல்லருளாலும் நூலக நூல்கள் மு°லமே அவற்றை அறிந்துக் கொண்டேன்.

இந்நேரத்தில் என்னை மிகவும் வேதனை அடைய வைத்த ஒருத் தகவலினை நான் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். என்னுடன் பணிபுரியும் வேதியியலில் பண்டாரகர் பட்டம் பெற்றத் தமிழர் ஒருவர் வேற்று மொழியினைத் தாய் மொழியாகக் கொண்ட மற்றுமோர் உடன் பணிபுரிபவரிடம் பின் வருமாறு ஒரு முறைக் கூறினார்:

"உங்கள் மொழியில் உங்கள் மொழிக்கென உரிய எண்கள் உள்ளன. ஆனால், மிகவும் பழைமையான, சிறந்த இலக்கிய வளமுள்ள மொழியாகப் போற்றப் படும் எங்கள் தமிழ் மொழியிலோ அவ்வாறு ஏதுமில்லை!".

பின் அத்தமிழரிடம், அவருக்குக் கீழ் பணிபுரியும், நான் எடுத்துக் கூறி அவ்வெண்களை அவருக்கு அறிமுகமும் செய்து செய்தேன்.

தமிழகத்திலேயே நம் மொழியின் இந்த அவல நிலையினை என்னென்று சொல்வது? இந்தியா விடுதலை அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை தமிழகத்தை ஆண்ட ஓர் அரசும் இதைப் பற்றி எவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் இருந்தது?

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் தான் என்ன? தமிழ் எண்கள் வெறும் சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு மட்டும் தானா? மேலும், தமிழ் மொழியினைத் தட்டச்சு செய்ய உதவும் இணையத்தளங்கள் பலவற்றிலும் தமிழ் எண்களுக்கென விசைகள் கிடையாது. தமிழ்த் தட்டச்சினை முறையாகப் பயின்ற நான் என்றுமே தமிழ்த் தட்டச்சுப் பொறிகளில் தமிழ் எண்களைத் தட்டச்சு செய்வதற்குரிய விசைகளை கண்டதில்லை!

எண்ணும் எழுத்தும் கண் என்கிறது உலகப் பொது மறை!

எழுதியவர் : Yaazhini Kuzhalini (4-Mar-14, 4:21 pm)
சேர்த்தது : Yaazhini Kuzhalini
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே