அறிவு அளித்த ஆருடம்

வற்றாத சீவநதி – வெறும்
தரையாய் மாறக் கூடும்
ஜீவனான நதி என்றும் – கரை
கடந்து தொடர்ந் தோடும்

உடமைகளில் உனை மறைத்தாய்
குறிக்கோளை உடன் மறந்தாய்
உயிர்க்கோலின் அழிவு கண்டாய் - வான்
கோள்கள் துணை வேண்டி விட்டாய் - கோள்
கணக்கில் கைகள் ஏந்தி நின்றாய்

உழைக்கும் தெய்வம் - உன்
-----கைகளாய் உடன் இருக்க
நிலையில்லா கோளில் தேடி
-----நீயோ கலங்கி நிற்க
அரை வேக்காட்டு ஆருடத்தில்
-----வெம்பிடுவாய் அறிவை விற்க

ஆற்று மணற் படுகையிலே
அழகாய் ஒரு குடில் அமைக்க
மழை வெள்ளம் அழித்துவிட
ஆருடமும் தேவையில்லை

அறிவற்ற மாந்தரென
மூடச் - செயல் புரிந்து
முன்னேற ஆருடமா?
ஆருடம் ஓர் அறிவீனம்
அறிவென்ற கருவி கூறும்
ஆருடத்தை கேட்பீரே

உனை நடத்தும் அறிவினையும்
உயர்வூட்டும் உழைப்பினையும்
உதைத்துத் தள்ளி உறங்கிடவே
கோள்கள் என்ன கோலமிடும்?
எள்ளி உன்னை நகையாடும்

முயற்சி இங்கு நிச்சயமாய்
-----கனியான வெற்றி தரும்
நிகழாது பொய்த்தாலோ
-----சற்று மனத்தளர்ச்சி பெரும்
விடாத முயற்சியினால்
-----கற்கள்கூட கனிந்து வரும்

வெடிக்கும் திரி ஒன்றை
-----வெளியே வைத்திடவே
வீணர் - சிறு பொறியும்
-----உன்னை சிதைத்திடுமே

இருக்கும் இடத்தினிலே
-----இன்பம் கொள்வதில்லை
ஏற்கும் செயல்களிலே
-----கவனம் போதவில்லை
சுமையாய் வாழ்விளுக்க
-----வலி யன்றி ஏதுமில்லை

உள்ளிருக்கும் ஆனந்தத்தை
-----புற உலகில் தேடுகிறாய்
பிறர் கையில் கோல் கொடுத்து
-----குரங்கெனவே ஆடுகிறாய் - உள்
ஆனந்தத் தீ அணையாது
-----தூண்டுகோலை நீ யெடுப்பாய்

மதம் கொண்ட யானையென
-----கர்வம் தான் தலைக்கேற
எல்லை யற்ற பெருமலையும்
-----எள்ளெனவே எதிர் தோன்ற
எட்டித்தள்ள கால் துடிக்கும் - கல்
உதைக்கின்ற கால் ஒடிக்கும் - வலி
மதத்தை உடன் இறக்கும்

கடுமையெனும் அடையாளம் - உன்
-----புறத்தோற்றம் தந்திடாது
மலர் போல மனமிருக்க
-----அவப் பெயரும் வந்திடாது

பாறை போல வடிவிருந்தும்
முகம் முழுதும் முட்கள் வைத்தும் – பலாக்
கனி இனிமை மறைக்காது – உருவம்
உள்ளத் தழகை சிதைக்காது

தன்னை வேண்டும் உறவினையே - மனம்
-----வெறுப்புடனே தள்ளி வைக்கும்
தான் தேடும் உறவொதுக்க
-----வலியாலே தினம் வதைக்கும்
உன்னை வேண்டும் அன்பேர்க்க
-----மகிழ்ச்சியுந்தான் உடன் சிரிக்கும்
உண்மை நீ உணர்ந்தாலே
-----நிலையாக வாழ் வினிக்கும்
உன்னை நீ உணர்ந்தாலே
-----உன் வசமாய் வாழ் விருக்கும்!!!

எழுதியவர் : சண்முகானந்தம் (4-Mar-14, 5:05 pm)
பார்வை : 132

மேலே