ஏகலிங்கமாம் சொக்கலிங்கம் உண்டே துணை
ஓர் ஊரில் இரண்டு சிவனடியார்கள் வாழ்ந்து வந்தனர். ஒருவர் பார்வைப் புலனற்றவர் மற்றொருவர் கால் முடமானவர். இருவரும் மிகுந்த வறுமையில் வாடிய போதும் சிவபெருமான் மீது அளவற்ற அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும், மாற்றுத் துணி கூட வாங்க இயலாத அளவிற்கு, வறுமை வாட்டி வதைத்து.
நாள்தோறும் இருவரும் ஆற்றில் நீராடி முடித்துத், தங்கள் ஒரே உடுப்பினைத் தாமே தோய்த்து, அது உலர்ந்த பின்னர் அதனை உடுத்திக் கொண்டு கோயிலுக்குச் செல்வது வழ்ககம். அவ்வாறு இருக்கையில், ஒரு நாள் ஆற்றிலடித்த பெருவெள்ளத்தில் பார்வைப் புலனற்ற அடியாரின் உடுப்பு அடித்துச் சென்றுவிட்டது. இதனைக் கண்ட மற்றொரு அடியார், "இப்போது உன்னிடம் உடுத்த உடுப்பு ஒன்றுமே இல்லையே என்ன செய்ய போகிறாய்?" என்று வினவினார்.
அதற்கு பார்வைப் புலனற்ற அந்த அடியார், "இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்கமாம் சொக்கலிங்கம் உண்டே துணை!" என்றார். அவர் அவ்வாறு இறை நம்பிக்கையுடன் சொல்லி முடித்த அந்த விநாடியே ஆற்றிலிருந்து மீண்டும் அவருடைய உடுப்பு அவரின் கைகளை வந்தடைந்தது.
(பி. கு.: கலிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உடை என்று பொருள்)