ஆண்டவனே தள்ளிப் போ

ஆண்பாதி பெண்பாதி
ஆகிநின்ற ஆண்டவனே
ஆணுமின்றிப் பெண்ணுமின்றி
அரையுருவம் படைத்ததென்ன ?

அம்பலத்துச் சபைதனிலே
ஆடுகின்ற கோமகனே
அளவற்ற துன்பத்தை
அள்ளியள்ளிக் கொடுத்த தென்ன ?

ஆணென்றும் பெண்ணென்றும்
அறுதியிட்டுக் கூறாமல்
அவசர கதியிலெம்மை
அனுப்பி வைத்து விட்டதென்ன ?

உண்டென்றோ இல்லையென்றோ
உணர்ந்து கொள்ள முடியாமல்
உள்ளுக்குள் எரிமலையை
உருவாக்கி விட்டதென்ன ?

எல்லோரும் முகம் சுளித்து
ஏளனம் செய்யும்படி
இரக்கமின்றி எம்மை நீ
இவ்வுலகில் விட்டதென்ன ?

ஆவேசம் கொண்டுவிட்டோம்
ஆண்டவனே உன்னிடத்தில்.
நீ சபித்து விட்டபடி
நிச்சயமாய் வாழ்வதில்லை.

எல்லோரும் இப்புவியில்
இயல்பாக வாழ்வதுபோல்
ஏற்றமுற வாழ்வதற்கு
இறுமாப்புக் கொண்டுவிட்டோம்.

உன்னால் முடியுமென்றால்
உதவி செய்யப் பக்கம் வா.
இல்லையென்று சொல்லிவிட்டால்
தள்ளிப் போ வெகு தூரம் !!

எழுதியவர் : (6-Mar-14, 7:30 pm)
பார்வை : 149

மேலே