மார்கழிப் பேதை

மாப்புள்ளியில்
மயங்கிக்கிடந்த எறும்புகள்
என்
நாணப்புள்ளிகளையும்
எண்ணத்தவறவில்லை.

கோலப்புள்ளிகளை
இணைக்க மனமில்லாமல்
விரல்களிரண்டும்
வீணாய்த் தவித்தன,
விழிகளிரண்டும் போவதுகண்டு.

மார்கழிப் பனியிலும்
வேர்த்துக்கொட்டியது
பறித்துவைத்திருந்த
பூசணிப் பூவிற்கு;
எனக்குள்ள அச்சம்
அதனையும் தொற்றிக்கொண்டதோ?


கஞ்சப்படியளக்கும்
விரலிடையில்
விசாலமாய் விழுந்தன
மாப்பொடிகள்,
விழியிரண்டையும் ஏமாற்றி.

எத்தனைநாள்தான்
நானும்
நாணத்தோடு
நடித்துக்கொண்டிருப்பது?

நீ
உயரத்தூக்கிச்செல்லும்
சைக்கிளுக்குக்கூடத் தெரியும்
என்
மனக்கோலத்தின்
கோலம் என்னவென்று.

ஆகவே,
ஒருமுறையாவது திரும்பிப்பார்,
உன் ஓரவிழியை விடுத்து
உரிமையாக.

எழுதியவர் : ஆன்றிலின் (6-Mar-14, 7:31 pm)
பார்வை : 62

மேலே