தொலைந்து போன பியானோ

மீட்சி பெற முடியாது
நாடு கடத்தப்பட்ட
நான்
என் ப்ரிய இசைக்கான
பியானோவை
எங்கே தேடுவது ?

என்னை வேரோடு பிடுங்கிய
என் நிலக் குழிகளில்
எனக்கான பியானோ
தன் வேர்கள்
பரப்பிக் கிடக்கிறது !

என் ஆன்மா
அந்தக் குழிகளில் தேங்கிய
என் உயிர் நீரில்
கலந்திருக்கிறது !

என் பால்யப் பெருவெளியில்
படிந்துள்ள
உயிருள்ள ஸ்வரங்களும்
அதனோடிணைந்த ராகங்களும்
என் கழிமுகங்களில்
இன்னமும் கரைந்திருக்கிறது !

மரங்கள் , கிளைகள்
பூக்கள் , பிஞ்சுகள் என
கருக்கொண்ட
என் பியானோ
அதன் குழியினை விட்டு
வர மறுக்கிறது !

மீட்ட விரல்களற்ற
என் பியானோவின்
அழுகுரலை
உப்புக் காற்றோடு
ஏதோவோர் உயிர்பறவை
என்றாவது ஒரு நாள் -
கடல் கடந்து
என் செவிகளில்
கொண்டு வந்து
சேர்த்திடாதா வென
கேட் புலன் நீண்டு
கிடக்கிறது
புலர்கின்ற என்பொழுதுகள் .

எழுதியவர் : பாலா (8-Mar-14, 4:54 pm)
பார்வை : 104

மேலே