சிதறல்கள்

ஏகாந்த மர்மத்தில்
உலர்ந்து கொண்டிருந்தன
சில உளறல்கள் ,
அசைகின்ற
கிளைகள் வழியே .....................!
============
திசை மறந்ததொரு
தென்றல் ,
திங்களின் வழிபிடித்த
சரணாகதியில்
எனது வாயிலில் ............!
============
ஓடிக்கொண்டே
இருக்கிறது காலம்
எனது இருக்கையின்
வெற்றிடம் நிரப்பாதபோது
அதன் ஊனம் அறியாமலே ............!
============
அடிவானத்தில்
பாய்கின்ற இரும்பலைகளை
விரல்கொடுத்து வருடும்
கண்களையுடையவன் ,
என்னவன் ...................!
============
யாரோ ஒருவரின்
கனவுகளில் - என்னை
வருத்திக் கொள்ளும்
தோற்றமே
தேடல்............!
============
சாம்பலில் மீண்டெழும்
நெருப்புப் பறவையெனவும்
உள்ளச் சிதறல்களில்
மீண்டெழுகிறதோர் பறவை
நினைவில் இல்லாதபோது............!
============
எதற்காகவும்
தன்னை வளைப்பதில்லை
வானம் ,
சில போது
வானவில்லுக்காய் ................!
=============
நிஜமாகக் கண்டதொரு
நிஜம்
நிழலாடிக் கொண்டிருந்தது
வெளிச்சத்தில்...............!
=============
-புலமி