தாலாட்டு

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ராரிராரிரோ-கண்ணே
ஆராரோ ராரிராரிரோ

ஊரோரம் பூவரசம்
உனக்காக தொட்டில் கட்டி
தாலாட்டு பாடுறேனடி-கண்ணே
தாய்நாடு நெலையக் கேளடி

வலிகூட எடுக்கவில்ல
வயித்திலுனை சொமக்கையிலே
கண்ணீரும் சொறக்கவில்ல
கண்ணேயுனை பெக்கயிலே

சின்னஞ்சிறு தீவில்வந்து
சிறுவண்டே நீ பொறந்தாய்
சினுங்காமல் கதைய கேளடி
சித்தம் கலங்கி நிற்கும் மக்களை பாரடி

பச்சைவயல் நீண்டிருக்கும் பூமியிலே
பச்சிளமே நீ பொறந்தாய்-உனக்கு
பாசத்தை ஊட்டுவேனடி-தாய்மண்
பாசத்தை ஊட்டுவேனடி

உனை பெத்தவனோ கல்லறையில்
கல்லறையும் தரைமட்டமாய்-கண்ணே
கார்த்திகை மாசம் வருதுடி
காந்தள் சிரிக்கின்ற அழகை பாரடி

தெக்கித்தியான் கொடுமை செய்ய-அதுக்கு
வடகத்தியான் உதவிய செய்ய-அவன்
கொடுக்காங்கள் பக்கம் தானடி-கண்ணே
தமிழ்நாடும் பொம்மை தானடி

கொழும்புறா பறந்துவந்து
கொட்டியது அமைதியல்ல
கொத்துக் கொத்தாய் குண்டுதானடி
கொடுத்தோம் எத்தனை உயிர்கள்தானடி

வீடிழந்து நாமிருந்தோம்
வீட்டுச்சின்னம் தூக்கிக்காட்டி
வீதியெங்கும் வந்தவைதானடி-கண்ணே
வீடுவந்தும் நாடு எங்கடி

மக்களெல்லாம் நடைபிணமாய்
மண்மீது ந்டந்துவர
மனசெல்லாம் நெருப்பு தானடி-ஊதி
அணைக்கின்ற நெருப்பு அல்லடி

பருவத்துக்கு பனிபெய்து
வெயிலடித்தால் காய்ந்துவிடும் துளிகள் அல்லடி
தனிநாடு அலையப்போலடி-என்றும்
தணியாது வீசும்தானடி

நெஞ்சமெல்லாம் தேசமென்று
உள்ளமெல்லாம் கோட்டை கட்டி-தேசம்
விடியுமென்ற கனவைக் காணுடி-கண்ணே
மாவீரர் கனவு தானடி

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ராரிராரிரோ-கண்ணே
ஆராரோ ராரிராரிரோ

எழுதியவர் : வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார் (14-Mar-14, 8:57 pm)
பார்வை : 262

மேலே