பித்தனடி தமிழ்க் கவிஞன்
முத்து விழிகள் என்பான்
மோகனப் புன்னகை என்பான்
முத்தாடும் செவ்விதழ்கள்
தித்திக்கும் தேன் என்பான்
பித்தனடி தமிழ்க் கவிஞன்
என் சொல்லுவேன் தோழி !
அங்கம் மின்னும் தங்கம் என்பான்
ஆங்காடும் கங்கை கலசம் என்பான்
சிற்றிடை நடக்கையில் நோகும் என்பான்
தாங்கிப்பிடித்திட நான் வரவா என்பான்
சித்தம் கலங்கியவனடி செந்தமிழ்க் கவிஞன்
என் சொல்லுவேன் என்னுயிர்த் தோழி !
செதுக்கிய செப்புச் சிலை என்பான்
செந்தாமரை சித்திரப் பாவை என்பான்
பதுக்கிடலாமோ உள்ளே காதலை என்பான்
மதியும் மாலையும் விடைபெறுகிறதே என்பான்
மதி மயங்கித் திரியும் மாலைக் கவிஞன்
என் சொல்லுவேன் என்னிதயத் தோழி !
சொல் என்பான் சொல்தரும் பொருள் என்பான்
பொருளில் பூத்து வந்த கவிதை என்பான்
கவிதை நாயகி கற்பனை தேவதை என்பான்
பித்தம் தெளிந்திட நீயே ம்ருந்தென்பான்
ஆதலினால் மருந்தாகி என்னையே தந்தேன்
என் செய்வேன் வேறு நீயே சொல் தோழி !
----கவின் சாரலன்