சேவல் கூவ வேண்டாம்
தேனிலவு -
தேனிரவு
தீயும் தீயும்
கொண்டன உறவு
அவளுக்குள்
அவனமர்ந்து
ஆட்சி செய்தான்
அவனுக்குள்
அவளமர்ந்து
ஆட்சி செய்தாள்.
அங்க திரட்சியில்
அடுக்கி வைக்கப் பட்ட தாவர பழங்கள்
நாவுக்கு எதிர் போராட்டம் நடத்தின .
நிசப்த இரவிலும்
நட்சத்திர வெளிச்சத்திலும்
சிவந்த பொருள்கள்
மேலும் சிவந்தன சேதாரமில்லாமல்
இங்கிதம் தெரியாத வண்ணச்சேவல்
எங்கிருந்தோ கூவியது
பொழுது விடிந்ததென்று
சுருங்கி கிடந்த உயரங்கள்
சோம்பல் முறித்து பார்த்த போது
விருந்துக்கு வெட்டுண்டு
துண்டு துண்டாக அரிந்து கிடந்தது
காலையில் கூவிய சேவல்.