கிளி பொம்மையும் கவிஞனும்

மவுனமாக இருப்பதாக விழியில் தெரிந்தது
மரக்கட்டை கிளி பொம்மை...!! - ஆனால் அது
மனம் திறந்து பேசி இருப்பது-விளையாடி உறங்கிய
மழலை சிரித்து உளறியபோது புரிந்தது.......!!

உணர்வுகளை புரிந்து கொள்ளும்போது
உயிரோட்டம் கல்லுக்குள்ளும் தெரிந்தது
உண்மையில் தேரையின் நிசப்தத்தை
உள்ளமும் இசைஎனவே ரசித்தது.....

கண்களுக்குத் தெரியாமல் நமைக் காத்தபடி
கடவுள் நம்மோடு வாழ்வது புரிந்தது
கண்கள் மூடியும் பிரபஞ்ச வெளிச்சம்
கவிதையின் வடிவில் உணர்வினில் தெரிந்தது

வீசிய தென்றல் விரல் சொடுக்கி விட்டது
விழியிமை முடிகளில் சிறு முத்தம் தந்தது
விரைந்து வந்த மலர் வாசம் நாசிகள் வழியே
விளைந்த நினைவுக்கு வெண்சாமரம் வீசியது...

கவிஞன் என்று மாறிவிட்டால்
காலம் வந்து பணி செய்யும்...
காலன் கயிறு ராக்கி கட்டும்...
கவலைகளும் மகிழ்ச்சிப் படி கட்டும்....

கண்ணீரை பட்டாம்பூச்சி தேடிவரும்
கருத்திலே இனிமை நிறைக்க நாடி வரும்
கண நேரம் பெரும் சிறகு வேண்டி வரும்
கவிஞன் தன் நினைவை அதற்கு கொடுப்பான்...

படபடக்கும் இறகுகளால் பரவி விழும் மகரந்தம்
பாரெங்கும் பூக்கள் மலர பண்புடனே வழி செய்யும்
பார்வைகளில் வண்ணம் தோன்ற - ரசனையால்
பார் எங்கும் இனி இனிமை மட்டும் -

இனி இனிமை மட்டும்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Mar-14, 5:19 pm)
பார்வை : 56

மேலே