மீராவும் நானும்

கவிஞர் மீரா அவர்களின் கவிதை ஒன்றினைப் படித்தேன்.அதில் இரண்டு சரணங்கள் மட்டுமே அவர்பெயரில் இத்தளத்தில் தமிழ்க் கவிஞர்கள் என்ற தலைப்பில் காணப்படுகிறது. அதை முழுதுமாகக் கீழே தர முயற்சிக்கிறேன்:

உனக்கென்ன-
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா,
வைக்கோலாய்ப்
பற்றி எரிகிறது.

உனக்கென்ன-
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய்...
என் உயிரல்லவா,
மெழுகாய்
உருகி விழுகிறது.

உனக்கென்ன-
போகிறாய்...போகிறாய்...
என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது.

மலைத்தொடர்கள்
ஆகாயத்தில்
அலையும் மேகங்களை
இழுத்தணைத்துக் குளிர்வித்து
இன்ப வியர்வையைச்
சிந்த வைக்கின்றன.

கற்கள்
ஒன்றோடொன்று உராய்ந்து
பிஞ்சுச் சுடர்களைப்
பெற்றெடுக்கின்றன.

ஆறுகள்
ஆசை மலர்களை ஏந்திச் சென்று
கடல்தேவன் மேனியில் தூவிக்
காதல் அருச்சனை
செய்கின்றன.

நீயும் நானும்
இந்த ஊமை நாடகங்களை
ஏன்
உண்மையாக்கக் கூடாது?

விலகி நின்று
வேடிக்கை பார்க்கவா
பிறவி எடுத்தோம்?

இப்படி
இருவராயிருந்தால்
இந்த உலகம் நம்மைத்
தீண்டத் தகாதவர்களாய்
ஒதுக்கிவிடும்.

என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை
உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது.

என் தோட்டத்தில் பாடும் குயில்
உன் தோட்டத்திலும் பாடுகிறது.

என் கண்ணில் படும் நிலா
உன் கண்ணிலும் படுகிறது.

என் இதயத்தில் நுழையும்
காதல் மட்டும்
உன் இதயத்தில் நுழையவில்லையா?
*******
இதையே என் மனது எழுதிப் பார்த்ததைக் கீழே கருத்தில் தருகிறேன்..கருத்தில் பூத்த கவிதையாக இருக்கட்டுமே என்று...

இது போன்றகவிதைகளின் கருவை நமக்கு எப்படி எழுத்தத் தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஒரு பயிற்சியாகவே நினைத்துப் பதிகிறேன் ...
நீங்கள் தாராளமாக விமர்சிக்கலாமே .....

எழுதியவர் : கவிஞர் மீரா (16-Mar-14, 10:00 pm)
பார்வை : 222

மேலே