பெருமழை
உச்சி வெய்யிலில் ஓயாமல் உழைத்து
பட்சிகள் தின்னுகின்ற அளவுக்கு
கால் வயிறு கஞ்சி குடித்து
அதுவும் ஒரு நாளில் இரு வேளை
நோயின்று வந்துட்டதால
அதுவும் பாதியாகி
உழைச்ச காசில
செலவுக்கு தப்பிச்ச சில காசு
நோய்க்கு பலியாகி மாத்திரையா
மாறுனத வெறுப்போட பார்த்துகிட்டு
தண்ணி போட்டு முழுங்கிவிட்டு
கண்ணுக்கு திரை போட்டு
உறக்கம் போட்ட சுப்பையாவ...!
மூக்கு மேல விரல வச்சு
பாக்கும்படி ஒய்யாரமா
டாடா சுமோவில கண்ணாடி வழியாக
டாட்டா காட்டிகிட்டு வந்தவன பார்த்து
பெருசுக முணுமுணுப்பா
பேசிக்கிச்சுக சலசலப்பா
கட்சிக்காரனா?கூத்தாடிக்காரனா?
கேட்டவரே பதிலையும்
நியுட்டனப் போல் மூளைய
சட்டுன்னு கசக்கி
சொல்லிகிட்டார் இப்படி
ரெண்டுமில்லப்பா ஏன்னா காரு
ஒண்ணுதான போவுது...!
விளையாட்டு பிள்ளைபோல
வீட்டுக்குள்ள ஓடிவந்து
திடுக்கிட்ட கண்ணம்மாவின்
காலுல விழுந்து
தூங்கிக்கிடந்த சுப்பையாவை
தொட்டு எழுப்பி
ஆரத்தழுவி சொன்னானே
செய்திதேனை அருமைமகன்
நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடிச்சுப்பா
சென்னையில பெரிய கம்பெனியில
நல்ல சம்பளத்துல வேலை கிடச்சுடிச்சுப்பா!
பட்டினியா கிடந்து பாசமா
வளத்த அம்மாவோட கஷ்டம்
கண்டிப்பா எம்மவன் பெரியாளா வருவான்னு
சொன்ன உங்களோட திட்டம்
ஒட்டுத்துணி போட்டுக்கிட்டு
சுத்திவந்த தங்கச்சியின் கஷ்டம்
எல்லாத்துக்கும் தீர்வா
வந்துட்டேன் பாருங்கப்பா.....
சாதிசனம் பெருமைப்பட
சனங்களெல்லாம் பாராட்ட
பெத்தாலும் ஒரு பிள்ளை
இவனப் போல வேணுமப்பா
ஊருசனம் சொன்ன
இந்த வார்த்தைகள கேட்டுபுட்டு
வேருக்கு ஊத்தின தண்ணியெல்லாம்
வீணில்லை
மரத்தோட நிழலுலதான்
ஓய்வெடுக்கலாமுன்னு
இறுமாப்போடு நடந்த சுப்பையாவ.....
இடிமூளை தாக்கியதால
திறந்துகிச்சு கண்ணுதிரை...
கண்டதெல்லாம் கனவுன்னு
தெரிஞ்சதால...
கனவுகண்ணில் இப்போ
பெய்ததுபார் பெருமழை
படிக்கப்போன இடத்துல பொண்ணோட
பழக்கமாகி,குடும்பத்து நினப்பயெல்லாம்
குப்பையில தூக்கிப்போட்டு
உலகத்தில் எங்கேயோ
ஒளி(ழி)ஞ்சுப்போன மவன நினச்சு
கனவுகண்ணில் இப்போ
பெய்ததுபார் பெருமழை!