நவீனக் கவிஞர்கள்

நல்லதோர் படைப்பென்பது
மக்களிடம் கருப்பொருளைப் பெற்று
மக்களுக்காகவே படைத்ததை
மக்களிடமே கொண்டு சேர்ப்பதல்லவோ?

உங்களது காதுகளுக்கு
இராக்கால ஊடல்சத்தம்
உங்களது கண்களுக்கு
கழுத்துக்கு கீழுள்ள கவிதைகள்
எண்ணங்களில் ஒவ்வொரு
உறுப்புக்களின் வர்ணனை

இவைதானே நீங்கள்
கவிபாடி கற்பனையில்
திளைக்கும் கருப்பொருள்?
விந்து சிந்தும் உங்களது எழுதுகோல்
இரத்தம் சிந்தும் மனிதத்தைப்பற்றி
எப்போது எழுத எழும்பும்

குடி போதையிலும்
காம போதையிலும்
தடுமாறி சிக்கித்தவிக்கும்
உங்களது எழுதுகோல்
தடம் மாறி மனிதம்பாட
எப்போது எழுந்து நிற்கும்?

காம விழிகளை மூடி
கருணை விழிகளை திறவுங்கள்
கவிபாட எத்தனையோ
கருப்பொருள் இருக்கிறது

நீங்கள் எழுதும் எழுத்திற்கு
கைநிறைய காசு கிடைப்பதன்றி
உங்களது கவிதையென்பது
நிலைத்து நிற்க காலமிருக்காது

நவீனக் கவிச்சமையல்
நாளாகி பின் நாறி
நாத்தமெடுக்கும் ஓர்நாள்

புண்ணாக்குகளின் புகழ்பாடி
புரவலர்களிடம் பிச்சைக்கு ஏங்கி
தாய்தமிழை விற்போரை
இங்கு என்ன சொல்லியழைப்பது?

ஃக்ருனேயின் கவிவீச்சில்
மதியுறக்கம் கொண்டிருந்த
மடிபாவின் மனிதம் எழுந்தது
கருப்பின மக்களின்
விடுதலை நெருப்பு பற்றியது

காசியும் புதுவையும்
எழுதிய எழுத்து
எத்தனை எத்தனையோ
விடுதலை வீரர்களை உருவாக்கியது

உங்களது எழுத்தென்பது
கடல்கரை காதலர்களையும்
பேருந்து காதலர்களையும்
மட்டுமின்றி உங்களுடைய
எழுத்து விதையில் எத்தனை
விடுதலைவீரர்களும்
புரட்சியாளர்களும் முளைத்தார்கள்?

காதல் தமிழர் மரபென்று
காமக்கவி யெழுதி
களித்திருப்போர் யிங்கு
தமிழர் வீரமதைப்பாட
எப்போது துணிவர்?

எழுதியவர் : வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார் (18-Mar-14, 7:23 am)
பார்வை : 236

மேலே