அருமைமகன்

ஆட்டுக்கறி காக்கிலோ
நூற்றி அம்பது ரூபா
கோழிக்கறி ஒருகிலோ
நூற்றி அம்பது ரூபா
வருமானங் கூடுறதுக்கு
வழியக் காணோம்
விலைவாசிக் குறையிறதுக்கும்
வழியக் காணோம்

சரி..கறிதான் இப்படின்னா
அதுக்கு வக்கிற குழம்பு
இருநூறு ரூபா
இப்படியே போனா
கடைசியில மனுஷன்
கல்லையும் மண்ணையுந்தான்
திங்கனும் போலிருக்கு

நிலைமைகளை புட்டுபுட்டா
புலம்பிகிட்டே வந்தாலும்
கையோடும் கறியோடும்
உள்ளே வந்து மனைவியிடம்
உம் மவன்
உழைப்புக்குன்னு போயி
ஒரு மாசம் ஆச்சு
களைப்பு வந்து கலைச்சுடாம
ஆக்கிப் போடு வாய்க்கு ருசியா

பொட்டப் புள்ள பெத்ததுப்போல்
கிடந்த வீடு இப்போ
மும்முரமாய் பம்பரமாய் பணியெடுக்க
ஊதியாச்சு மில்லுசங்கு!

ஒரு மாசம் உழைச்சதுக்கு
காசு கையில் வந்தாச்சு
களைப்பு கொஞ்சம் இருந்தாலும்
காசு சிரிப்பா மாத்திடுச்சு
இதுவரைக்கும் இருந்த உலகம்
சுத்தமாக மாறிடிச்சு
உருண்டையாக இருந்ததிப்போ
சதுரமாக ஆகிடிச்சு!

ஓடிப்போயி ஆத்தாக்காலில்
விழுந்து சொன்னான் அருமைமவன்
இந்தாம்மா என்னோட
முதமாசச் சம்பளம் -
கூறுகெட்டவனே அப்பாகிட்ட
போய்குடுடா -
இது ஆத்தா வாக்கு

ஆத்தாவுக்கு மட்டுமில்ல
அகில உலகத்தாருக்கும்
ஆணி அடிச்சதப்போல
சொன்னானே அருமைமவன்

இத்தனைநாள் காசை எனக்கு
அப்பா தரும்போது
அவரு கை மேலிருக்கும்
என் கை கீழிருக்கும்
இப்போ மட்டும்
அவரு கை கீழ
போக விடமாட்டேன்
எப்பவுமே அப்பா கை
மேலதான் இருக்கணும்
மேலோங்கி இருக்கணும்
புரிஞ்சுக்கோமா சொன்னா!

எழுதியவர் : உமர் ஷெரிப் (19-Mar-14, 11:01 am)
பார்வை : 3599

மேலே