விடிந்திடும் பொழுதுகள் விழாக்கோலம் என்றுமே

பெண்ணிவள் இன்று குழப்பத்தில் உச்சமா
பேதையவள் இன்று பாதையில் மாற்றமா !
கல்லூரி காலம்வரை கரகாட்டம்தான்
களைப்பின்றி தளராமல் களிப்பாட்டமே !
ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட மங்கையரோ
அமைதியாய் அமர்வதும் எளிதல்லவே !
நெஞ்சமும் நாடிடும் மேலும் படித்திட
கொஞ்சமும் தயங்கிடும் சூழ்நிலையும் !
வசதியுள்ளோர் அசதியன்றி படித்திடுவர்
வசந்தகால வாழ்வினை தொடர்ந்திடுவர் !
வாய்ப்பில்லா மங்கையரோ வாடிடுவர்
வாழும்நிலை அறிந்து முடிவெடுப்பர் !
அலுவல் தேடிட அலைந்து திரிந்திடுவர்
ஆய்ந்து அயர்ந்து வேலையில் அமர்வர் !
கிட்டிடும் அலுவலை பெற்றிடும் பெண்கள்
எட்டிடும் அளவு எய்திடுவர் ஆனந்தத்தை !
இடையில் ஒருவர் இதயத்தில் வந்திட்டால்
உடையிலும் மாற்றம் உள்ளத்திலும் மாற்றம் !
உண்மை நிலையோ உடையவர்க்கே வெளிச்சம்
பெண்ணின் மனதையோ பெற்றவரே அறியார் !
சுற்றி உள்ளோர்க்கும் சுற்றங்களும் புரிவதில்லை
உள்ளத்தின் முடிவையும் உறுதியாக அறிவிப்பர் !
தெளிந்து செயல்படுங்கள் தெரிந்து உறவாடுங்கள்
குழப்பம் தவிருங்கள் குறையின்றி வாழ்ந்திடுங்கள் !
நாகரீக நங்கைகளே நடமாடும் நவீன மங்கைகளே
நாணலாய் வாழ்ந்தாலும் நாடு போற்ற வாழுங்கள் !
வளர்த்தவர்களை நினைத்திடுங்கள் வாழும்வரை
ஆளாக்கி விட்டவரை ஆயுள்வரை நினையுங்கள் !
முடிவும் சரியானால் உள்ளமுடியும் மிஞ்சிடுமே
விடிந்திடும் பொழுதுகள் விழாக்கோலம் என்றுமே !
விடை தெரியாதவர் வழி கண்டிடவும்
வழி தெரியாதவர் விடை காணவும்
உதவட்டும் என் வரிகள் !
( ஆணும் பெண்ணும் சமன் நிலையே என்றாலும்
பாதிக்கப்படுவது இக்காலத்தில் பெண்களே என்ற
ஆதங்கத்தின் அடிப்படையில் எழுதியதே இது )
பழனி குமார்