பெயர் பிழைக்கும்

குறைமட்டுங் காண்பதல்ல வாழ்க்கை
==குறையான போதுமதை மனதால்
நிறைவோடு காண்கின்ற ஆற்றல்
==நீகொள்ளக் கூடிவரும் சிறப்பு.
பிறைகூட சிலநேரம் குறையே.,
==பெரிதாக அதுகூட நிறைவே
முறையாகக் கண்டிதனை யுணர்ந்து
==முன்னேறு இதுவாழ்வின் முறையே!

பலவண்ணம் இருந்தாலும் வானவில்
==பார்க்கின்றக் கண்ணுக்கு அழகு.
பலவெண்ணம் இருந்தாலும் மனதால்
==பார்ப்பதிலே தெரிவதுதான் அழகு.
சிலவண்ணம் பொருந்தாதுப் போனால்
==சீக்கிரமே அதைவிட்டு விலகு.
நிலவென்னும் மனங்கொண்டு பழகு
==நிழலாக வுனைத்தொடரு முலகு.

நல்வழிகள் தனைமட்டுந் தேடி
==நடந்தேநீ செல்கின்ற போது
செல்கின்ற திசையெங்கு முன்னை
==சேர்கின்ற அன்பென்னும் பூக்கள்
பல்லாக்காய் உனைநாளுஞ் சுமக்கும்
==பாசத்தில் சிறகுனக்கு முளைக்கும்.
அல்லாமல் போனாலோ இந்த
==அகிலத்தில் உனதுபெயர் பிழைக்கும்!

*பெயர் பிழைக்கும் -பெயர் கெடும் என்னும் அர்த்தத்தில்.
மெய்யன் நடராஜ் -இலங்கை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Mar-14, 2:36 am)
பார்வை : 106

மேலே