சொர்க்கம் எங்கே அத்தியாயம் - 3
சொர்க்கம் எங்கே ?
அத்தியாயம் - மூன்று
3.
ஐயா ..
என்ன .. (யமகிங்கரர்கள் இருவரும் ஒருகுரலில்).
உங்களிடம் நான் கேள்விகள் கேட்கலாமா ? பதில் தருவீர்களா ?
அது நீ கேட்கும் கேள்விகளைப் பொறுத்திருக்கிறது.
சரி. கேள்விகளைக் கேட்கவா.?
கேள்.
எங்கு என்னை கொண்டு செல்கிறீர்கள் ?
எங்கள் தலைவர் சபைக்கு
உங்கள் தலைவர் யார் ?
எமகிங்கரர்கள் நாங்கள். எங்கள் தலைவர் யமராஜ் அவர்கள்.
யமராஜ் பார்பதற்கு கருப்பா இருப்பாரா .. இல்லை .? .
கருப்புதான் அவருக்குப் பிடிச்ச கலரு
அங்கு வேறு யாரெல்லாம் இருப்பார்கள் ?
தலைவரும் அவரது பணியாட்களும்
சித்ரகுப்தன் இருப்பாரா ?
இருப்பார்
அவர் தான் தேவலோகத்து கணக்குப்பிள்ளையா ?
ஆம்
நான் இதுவரை வணங்கிய தெய்வங்கள் பல. இந்துமதக் கடவுள் மட்டும் இன்றி, அல்லாஹ் மற்றும் ஏசுபிரானையும் வணங்கி இருக்கின்றேன். பிரம்மா, சிவபெருமான், மகாவிஷ்ணு அவர்களின் தேவிகள் சரஸ்வதி, சக்தி, மகாலட்சுமி அங்கு இருப்பார்களா ?
மாட்டார்கள். அவர்கள் அவரவர்க்கென்று அமைந்த உலகில் இருப்பார்கள்
அங்கு சென்று அவர்களை தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டுமா ?
அது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களை சந்திக்க சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது தெரியும்.
இந்திர சபையில் தேவகன்னியர் ஊர்வசி, மேனகா, ரம்பா, திலோத்தமா இவர்களின் நடனம் செய்வதைக் கண்குளிரக்கண்டு ரசிக்க வாய்ப்பு கிடைக்குமா ?
உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை எங்களுக்குக் கூட அப்படியொரு பாக்கியம் கிடைக்கவில்லையே. உனக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை.
பாவ புண்ணியங்களுக்குத் ஏற்ப தண்டனை கிடைக்கும் என்று பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா ?
உண்மைதான்
பாவம் செய்தவர்களை கொதிக்கும் எண்ணைச் சட்டியில் போடுவார்களாமே !
ஆம். போடுவார்கள்.
எந்த பாவத்திற்கு அந்த தண்டனை என்று சொல்லுவீர்களா ? ஒருவேளை நான் அந்தப் பாவம் செய்திருந்தால் ?
சொல்வதற்கில்லை
எந்தப் பாவத்திற்கு என்ன தண்டனை என்று சற்று சொல்லமுடியுமா ?
சொல்வதற்கில்லை. அதை வழங்கும் அதிகாரம் எங்கள் தலைவருக்குத் தான் உண்டு. உனக்கும் தெரிய வரும் விரைவில்.
சரி .. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அங்கு சென்றடைய ?
உயிர் பிரிந்த பதினான்கு நாட்களில் அங்கு சென்றடையலாம்.
அது வரை நீங்கள் ஒய்வு எடுத்துக்கொள்ள மாட்டீர்களா ?
மாட்டோம்
களைப்பே வராதா ?
வரும்
சற்று நேரம் என்னை தோளிலிருந்து இறக்கிவைத்து இளைப்பாரிக் கொள்ளலாமே ?
உன் வினாவிற்கு விடை தரும் முன் ஒரு கதை சொல்கிறேன். கேள். பல்லாண்டுகளுக்கு முன், உயிரை சுமந்து வந்த ஒரு கிங்கரனுக்கு இளைப்பாறத் தோன்றியதால், சுமந்து வந்த உயிரை இறக்கி கீழே வைத்ததும், அந்த உயிர் எங்கோ பறந்து விட்டது. எங்கு தேடியும் அவ்வுயிர் கிடைக்கவில்லை. வெறுங்கையுடன் யமராஜன் முன் நின்று, நடந்ததை சொல்லவும், சினம் கொண்ட யமன் அந்தக் கிங்கரனை நரகத்தின் வாயிற்காப்போன் பணிக்கு நியமித்து விட்டார். இந்த விஷயம் அறிந்த இந்திரன், வசிஷ்டர், பிரகஸ்பதி மற்றும் சில மகா முனிவர்களிடம் விளக்கம் கேட்க, அதற்கு ஒரு யாகம் செய்து அவ்வுயிரை மீட்டனர். யம கிங்கரர்களுக்கு பசி, தாகம், களைப்பு இவை வராதிருக்க ஒரு மந்திரமும் சொல்லிக் கொடுத்தனர். யம கிங்கரர்களை பணி நியமனம் செய்திடும் வேளை இம்மந்திரமும் பிறகு சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர். அன்று முதல் ஒருவருக்கு இருவராக பணியில் அமர்த்த நியமனம் செய்யப்பட்டதாகவும் அறிய வந்தோம்.
உங்களுக்குப் பசி வராதா ?
வரும்
அதற்கும் ஒரு மந்திரம் உள்ளது. அதை ஒருமுறை மனதிற்குள் சொல்ல, பசியும் பறந்து விடும்.
எனக்குப் பசிக்கிறதே. !
அதற்குத்தான் பதிமூன்று நாட்கள் உன் சந்ததிகள் ஸ்ரார்த்தம் செய்து படையல் படைக்கிறார்களே.
- வளரும் -