சொர்க்கம் எங்கே அத்தியாயம் - 4
சொர்க்கம் எங்கே ? தொடர்
4.
இன்றோடு என் உயிர் பிரிந்து எத்தனை நாட்கள் ஆயிற்று ?.
இன்று இறுதிச் சடங்கு நடந்து முடிந்து விட்டது. அதாவது உன் உயிர் பறித்து பதிமூன்றாம் நாள் கழிந்து விட்டது.
யமகிங்கரர்களே ! உயிர் பிரிந்து பதிமூன்று நாட்கள் பறந்து விட்டதே ! யார் யார் வந்திருந்தார்களோ ? தெரியவில்லையே !
தெரிந்து என்ன ஆகப்போகிறது ?
ஒன்றும் ஆகப்போவதில்லை. பூலோகத்தில் இருந்தபொழுது கேள்விப்பட்டிருக்கிறேன். உயிர் பிரிந்த பன்னிரண்டு நாட்கள் ஆத்மா உயிர் பிரிந்த இடத்தைச் சுற்றிவரும் என்று. ஆனால் என் ஆத்மா அங்கு சென்றதாகத் தெரியவில்லயே !
கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தான். உன் ஆத்மா அங்கு செல்லாததிற்கு காரணம் உன்னை ஒருவரும் மனதார நினைக்கவில்லை என்பது தான்.
அப்படியா ?
அப்படித்தான்.
ஒருவர் கூடவா என்னை நினைக்கவில்லை ?
ஆம்
இருக்காது கிங்கரர்களே ! மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் என்று பலர் இருக்கிறார்கள். ஆசா பாசம், அன்பு, பண்பு, காதல், நட்பு என்று பலரும் சொல்லி என்னை புகழ்ந்தும், மற்றும் பல நேரங்களில் இகழ்ந்தும் இருக்கிறார்கள். ஒருவர் கூடவா என் பிரிவை உணரவில்லை ? நம்பமுடியவில்லையே !
நீ சரியான முட்டாள். இருக்கும் பொழுதே பல நேரங்களில் இகழ்ந்தும் இருக்கிறார்கள் என்று சொல்கிறாய். பின் இறந்தபின் உன்னை எண்ணி என்ன பலன் என்று ஏன் சிந்திக்க மறுக்கிறாய் ?.
பாசப் பிணைப்பிலும் மோசம் செய்வார்களா ?
வாழும் நாட்களில் உணராத உண்மையையா .. இனி நீ உணரப்போகிறாய் ? மானிடனே ! மறந்துவிடு அவ்வுலகை. இனி நீ காணப்போகும் உலகினைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்பதே உன் விருப்பமாக இருக்க வேண்டும். தெரிந்ததா ?
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஏதோ எல்லோரும் என்னை மறந்து விட்டால் நல்லதே. இருக்கின்ற காலத்தில் நினைக்காதவர்களா இறந்தபின் நினைப்பார்கள் ?.
சரி, அது போகட்டும். எமதர்மராஜன் முன்னில் எப்பொழுது நிறுத்தப்படுவேன் ? சற்று சொல்லுங்களேன்.
நாளை காலை சுமார் ஒன்பது மணியளவில்.
இப்பொழுது காலையா .. மாலையா ?
இரவு நேரம்.
இரவா ? எனக்கு இருள் தெரியவில்லையே ? எங்கும் ஒளி தானே தெரிகிறது.
ஒளிமயமான எதிர்காலம் உன் உள்ளத்தில் தெரிகிறதோ ?
ஆம். பச்சை விளக்கு சினிமாவில் சிவாஜி கணேசன் பாடிய பாடல். அந்த ஒளிமயமான எதிர்காலம் இது தான் என்று அன்று தெரியவில்லை எனக்கு.
ஒருவேளை, யாராவது சொல்லி இருந்தாலும் நம்பி இருப்பாயா நீ ?
நிச்சயமாக இல்லை..
- வளரும் -