முக நூல் நண்பன்

அலுவலகத்தில் இருந்து வந்த உடனே ஏதோ அசுரப் பசிக்காரனைப் போல முக நூலைத் திறந்தேன். திசை அறியா வழக்கமான சிறிது நேர உலாவிற்குப் பிறகு, புது நண்பர்கள் தேடலைச் சொடுக்கினேன். துறு துறு கண்களுடன், இந்த உலகத்தையே நொடியில் புரட்டிப் போட்டு விடுவேன் என்ற அதிக நம்பிக்கையான திமிரான மிடுக்குடன் ஒரு இளைஞன் என் நட்பு கோரி விண்ணப்பம் அனுப்பி இருந்தான். மிகவும் ரசிப்பான பெயர். எழில் என்றிருந்தது. அவனின் முகப்புப் பக்கத்தில் பதிந்திருந்த விபரங்களைப் படித்தேன். பட்டப் படிப்பு முடித்து இருக்கிறான். உலகம் சுற்றிப்பார்க்க ஆசை என்று குறிப்பிட்டு இருந்தான். மற்றபடி ஏராளமான புகைப்படங்களை தரை இறக்கம் செய்திருந்தான். உலகத்தில் இருக்கும் அனைத்து இடங்களின் புகைப்படங்களும் சிறு குறிப்புடன் இருந்தது என் ஆர்வத்தை அதிகம் தூண்டியது. முதன் முறையாக ஒரு நாள் அரட்டை அரங்கத்திற்கு வந்தான். வழக்கமான முகமன் முன்னுரைகளைக் கடந்து “உங்களை நான் எப்படி அழைக்க?” என்று கேட்டான். “உன் விருப்பம்” என்றேன். சட்டேன”உங்களை பெரியப்பா என்று அழைக்கவா?” என்றான். இப்படியாகத்தான் தொடர்ந்தது எழிலுடன் என் முக நூல் நட்பு.
அரசியல், சினிமா, மதம் சார்ந்த எல்லாவற்றிலும் எங்களுக்கு நூறு சதவிகிதம் கருத்து முரண்பாடுகள் இருந்தது. எங்கள் இருவரின் நட்பிற்கு முக்கியமான காரணங்களாக இருந்தது நான் எழிலுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்குள் ஓடும் குறும்படங்கள்தான். ஒவ்வொரு புகைப்படத்தையும், விபரமான அடிக் குறிப்புடன் எழிலின் தனி விடுப்பிற்கு அனுப்புவேன். என் பணி சார்ந்து பல இடங்களுக்குப் போகும் போதெல்லாம் எழிலிற்காக அதிக புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ஊருக்கு அப்பால் தனியாக இருக்கும் அம்மன் கோயில், தண்ணீர் வற்றிக்கொண்டிருக்கும் குளம், உயரமான மரத்தின் கிளைகளில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூடு, வீட்டில் காய்த்த முதல் மாதுளை, முதலில் எட்டிப்பார்த்த தென்னங்குருத்து, பழைய மண்டபங்கள், கோயில் கோபுரங்கள் என்று எல்லாவற்றையும் கேமிராக் கண்களாலேயே பார்க்கவைத்தவன் எழில்தான். சில சமயங்களில் மனம் உலர்ந்து, தைரியம் இழக்கும் போதெல்லாம் முதிர்ந்த குடும்ப அங்கத்தினரைப் போல அறிவுரை கூறுவான். எந்த ஒரு சந்தர்பத்திலும் அவனின் துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை. வாழ்க்கை மீதான அவனின் அசைக்க முடியாத நம்பிக்கை யாரையும் ஒரு நொடி வியக்க வைத்துவிடும். அவனிடம் இருந்து நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
எழிலின் சொந்த ஊர் மதுரை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வேலை குறித்து போகும் போதெல்லாம் அவனை சந்திக்க திட்டமிடுவதும், பிறகு அவசர அவசரமாக சென்னைக்கு வருவதுமாக இருந்தேன். இப்படியாக இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.
ஒரு சமயம் நான் மதுரைக்கு வரும் தேதியை முன் கூட்டியே என் கைபேசி எண்ணுடன் அவன் தனி விடுப்பில் அனுப்பி இருந்தேன். முக நூல நண்பன் ஒருவனுக்கு என் கைபேசி எண்ணை கொடுத்தது இதுதான் முதல் தடவை. உடனே எழில் பேசினான். ஏராளமான விஷயங்களை நாங்கள் இருவரும் அரட்டைப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதால் அதிகமாக எங்களிடன் பேச எதுவும் இருக்கவில்லை. மதுரைக்குச் சென்று மூன்று நாட்கள் ஆகியும் அவனை சந்திக்க நேரம் கிடைக்கவே இல்லை. எப்படியும் அவனை சந்திக்காமல் சென்னை போகக் கூடாது என்பதில் மட்டும் நான் திடமாக இருந்தேன். பேருந்து கிளம்ப ஒரு மணிநேரம் முன்பே அவனைச் சந்திக்க மதுரை மத்திய பஸ் நிலையத்தை அடைந்தேன். வழக்கம் போல மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக இருந்தது. மகனை பேருந்தில் ஏற்றிக் காத்திருக்கும் பெற்றோர்கள், யாத்திரைக்குச் செல்லும் பக்தர்கள், பேரக் குழந்தைகளை விரட்டிக்கொண்டு ஓடும் தாத்தாமார்கள், நாளிதழில் முழுவதுமாக மூழ்கி தன் நிலை மறந்தவர்கள், மடிக்கணிணியில் போராடிக்கொண்டு இருக்கும் இளைஞர்கள், காவல் துறையினருக்குப் பயந்து ஒளியூட்டிய குருவிகளை நடை மேடையில் விற்கும் வட இந்தியச் சிறுவன். கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். பத்து நிமிடங்கள் நொடியில் கரைந்து விட்டது. ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று எழுந்தவுடன் “பெரியப்பா” என்று வாஞ்சையுடன் ஒரு குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். சுமாரான நிறம். அதிகம் ஒடுங்கிய தோள்கள். சூம்பிய கால்கள். நடைவண்டியில் அமர்ந்திருந்தான் எழில். நான் சூழ்நிலையை மீறி சுதாரித்து வருவதற்குள், “என்ன பெரியப்பா, ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டேனா. சாரி பெரியப்பா. நேரத்துக்குத்தான் கிளம்பினேன். அது சரி, ஏதாவது சாப்பிட்டீங்களா” என்று என் அனுமதிக்குத் துளியும் காத்திருக்காமல் அருகில் இருக்கும் ஜிகர்தண்டா கடைக்கு வண்டியை உருட்டிக்கொண்டு சென்றான். “அண்ணே சூப்பரா ரெண்டு ஜிகர்தண்டா போடுங்க. நல்லா இருக்கனும், இல்லே!” என்று கடைக்காரனை செல்லமாக மிரட்ட, அவன் “என்னா மாரிமுத்து, ரொம்ப நாளா ஆளைக் காணோம். சாரு யாரு?” என்று என்னைப்பாத்து அவனிடம் கேட்டான். “நான் உங்கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேனே. என் பெரியப்பா, சென்னையிலே இருக்காரு. கடல் பாசி உண்டன போடு. பெரியப்பா சென்னைக்கு போய் பத்து பேருகிட்டேயாவது உன்னைப்பத்தி சொல்லனும்” என்று கண்களை சிமிட்டினான். எழிலைப் பற்றி நான் உருவாக்கியிருந்த கற்பனை, அவன் பெயர் உட்பட ஏதோ கலைத்துப் போட்டு அடுக்கியது போல் இருந்தது. வழக்கமான செயல்பாட்டினை இழந்து ஒத்துழைக்க மறுக்கும் நடுங்கும் கைகளால் ஜிகர்தண்டாவை கடைக்காரனிடம் இருந்து வாங்கி என்னிடம் நீட்டினான். “அண்ணா ஏப்படி இருக்காங்க பெரியப்பா, அம்மாவுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று வண்ணக் காகித்தில் சுற்றிய பரிசுப் பொருளை என் கைகளில் திணித்தான். “அடுத்த தடவை வரும்போது நிச்சயம் அண்ணாவையும், அம்மாவையும் கூட்டிக்கிட்டுத்தான் வரனும் பெரியப்பா. ஒரு வாரம் நானே தங்கவைச்சு அவங்களை எல்லா இடத்துக்கும் கூட்டிகிட்டு போய் ஊரு சுத்துக் காட்டணும். என்ன சொல்றீங்க”என்று என்னை ஏக்கத்துடன் பார்த்தான் எழில். வண்டி நடை மேடையை விட்டு மெதுவாகக் கிளம்பியது. “கண்டிப்பா வரேன். அதுக்கு முன்னே சென்னைக்கு உன்னை கூட்டிகிட்டு போக அண்ணாவை அனுப்பறேன். கண்டிப்பா வரணும்”. என் அன்புக் கட்டளைக்கு எதுவும் பதில் கூறாமல் பலவீனமான தன் கைகளை உயர்த்தி கையசைத்து என்னை வழி அனுப்பினான் எழில் என்ற மாரிமுத்து.

எழுதியவர் : பிரேம பிரபா (23-Mar-14, 9:32 pm)
Tanglish : muga nool nanban
பார்வை : 269

மேலே