முதிர்ந்த வரிகள் 0தாரகை0
அன்பென்னும் நீர்கொண்டு குளிப்பாட்டி
ஆசையோடு பாசமிட்டு சோறூட்டி
அரவணைப்பு தொட்டிலில் தாலாட்டி
அமைதியாய் தூங்க வைப்பேன் தோள்தட்டி!
பால்சப்பும் பேரழகில் பார்மறந்து
பல்லில்லா சிரிப்பினிலே ஊர்மறந்து
தப்பான மழலைமொழியில் மெய்மறந்து
தத்துநடை அழகினில் எனைமறந்தேன்!
ஆயிரம் கேள்விகள்அடுக்கிடுவாய்
அறிவாளியென்றெண்ணி சிலிர்த்திடுவேன்
அசராமல் பதில்கள் கொடுத்திடுவேன்
அள்ளி கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்திடுவேன்!
கடகடவென காலங்கள் உருண்டோட
மடமடவென மகனேநீ ஆளாக
படபடவென காதலில் சிறகடிக்க
தடபுடலென திருமணம் செய்து வைத்தேன்!
மகளில்லா குறைபோக்க மகள் வந்தாள்
மகனுக்கு மகனாக பேரன் வந்தான்
மகிழ்ச்சியில் அகவையை மறந்தேனே
முதுமையில் முடியாமல் விழுந்தேனே!
அன்றுன்னை பார்த்தேன் நான் ஆசையாக
இன்றென்னை பார்க்கிறாய் இம்சையாக
எங்குத்தள்ளப் போகிறாயென துடிதுடிக்க
இறுக்கிக் கண்ணை மூடுகிறேன் மனம்வியர்க்க!
முதியோர் இல்ல சமாதிக்கு அனுப்பிவிட
முடிவெடுத்தாய் உயிரோடு கொன்றுவிட
விதிநொந்து கிடக்கின்றேன் படுக்கையிலே
வழியின்றி புலம்புகின்றேன் கவிதையிலே!
அன்புமகனே! வைக்கின்றேன் ஒரு வேண்டுகோள்
அறிவுரையென்றெண்ணி நீ தவிர்க்காதே!
முதியோர் இல்ல முகவரியை மறக்காமல்
முன்பதிவிட மகனிடம் கொடுத்துவை!
ஆயிசு நீண்டிருந்தால் சந்திப்போம்
அங்கு நாம் எதார்த்தத்தை சிந்திப்போம்
அப்போதும் உன்னை நான் வென்றிடுவேன்
அன்பாலே-அன்பாலே கொன்றுடுவேன்! ! !
முதுமை வராதா
மூர்ச்சை ஆகாதா
முதியோர் இல்லங்கள்!