மகளிர் மாண்பு
தன்னிகரில்லாத் தரணியிலே....
பூக்களோடு சுற்றித் திரிந்து
பட்டாம் பூச்சிகளாகப் பறந்து திரிந்து
வாழ்கையின் வனப்புக்களை
சிறப்புக்களாக மட்டும் பார்க்கத் தெரிந்த
குட்டிக் குழந்தைப்பெண்
எட்டு வயது வரை பேதை...
தனக்குள்ளே பேசிக்கொண்டு
பள்ளிப் படியிலும் படிப்பிலும்
துள்ளிக்குதிக்கும்
சிட்டுக்குருவிக் குட்டிப் பெண்கள்
எட்டில் இருந்து
எட்டி வயது பத்து வரை பெதும்பை...
புரிந்தும் புரியாமல்
ஏதோ ஒரு மாற்றம்
ஏனோ ஒரு குறு குறுப்பு
வினாக்களோடு நடை போட்டு
பெண்ணாய் பூக்கும் வயதினை
தொட்டு நிற்கும் அன்னமாய்
வயது பதினான்கு வரை
அவள் மங்கை...
குழந்தைத்தனம் பாதி
பெண்மைக்குணம் மீதி-என
மடந்தையாய் மகளிர் பின்
அரிவையாய்...
தெரிவையாய்...
பேரிளம் பெண்ணாய்...
பல நிலைகள் தாண்டி வந்தாலும்
அன்னையாய் அகிலத்தைத் தம்முள்
அடக்கி விடுவதுண்மைதான் ...
பூமியாய் தாங்கிடவும்
நதியாய் தாகம் தீர்த்திடவும்
பாவங்கள் போக்கிடவும்
மேதினியில் பெண்கள் பொக்கிசங்கள்...
பெண்கள் தொட்டு விடாத துறைகள் இல்லை
எட்டி விடாத சிகரங்கள் இல்லை
ஆனால் அவர்கள்
பட்டுவிடாத துயரங்களும் இல்லை
கட்டுக்கடங்கா காதல் கவிதை புனையும்
கவிதாயினி...
தம் இனதின் மானம் காக்க
இன்று வரை 14 வருட
உணவுத் தவிர்ப்புத் தவத்தில்
அதுதான் உண்ணா நிலைப் போரில்
நம்மில் எத்தனை பேர் அறிந்திருகிறோம்
ஈரொம் ஷர்மிலாவை??
பெண்ணின கல்விக்குக் குரல் கொடுத்து
வெடிகுண்டை பரிசாய்ப் பெற்ற பெண்குழந்தை
மலாலா...
ஈழத்தில்.......
தொலைந்து போன அண்ணனைத் தேடிதாருங்கள்
என உலமறிய அலறிய தங்கை
விபூசிகா?
பெண்மை பூத்து வெறும் பத்து நாளில்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்
இன்று நன்னடத்தைப் பள்ளியில்....
எதனை இசைப்பிரியாக்கள்
சிதையில் வேகினார்கள்????
பெண்களின் பிணங்களினை
கூடப் புணர்ந்தார்களே.....அங்கு
இப்படிச் சொல்லிப்போனால்
இது முடிவிலிதான்...
காவியக் கதைகளில் பெண்கள்
புனிதர்கள்...
கற்புக் கரசிகள்...
நம்பிக்கைகளில்
அவர்கள் சக்தியே உருவான
தெய்வங்கள்..........
ஆனால் இந்த யகத்தினில்...
பெண்கள் நிலை என்ன?
மாண்பு நிறைந்த பெண்கள் தாம் நாம்
மாண்டு போக மாட்டோம் மீண்டும்
எழுவோம் விதையாய் விழுந்து......
குறிப்பு :கடந்த 23. 03 .2014 மதுரை வளரி எழுத்து கூடத்தால் நடாத்தபட்ட" மகளிர்மாண்பு " என்ற தலைப்பிலான கவியரங்கத்துக்காக வாசிக்க பட்ட என் கவிதை