ஜனநாயகம் திரும்பி விட்டது
![](https://eluthu.com/images/loading.gif)
இயலாமையின் ஆலாபனையோடு
வாள்களை உறையில் செருகி நாட்களாகியது
அல்லாது போனால்
ஊழி சூழ் கடலில் முனைகளைப் புதைத்தது
ஆதியொன்றில் குளம்படிகளோடு
அதிகாரமாய் முன்னேறிய குதிரைகள்
ஈட்டிகளால் நொண்டிகளாகிய
தொன்மத்தின் நிலத்தில்
செங்குத்தாய் எழும்புகிறது அவலம்
முன்னர் தொலைந்தவர்களை
கைகளில் படங்களாக தூக்கியளும்
எல்லோர் மனங்களிலும்
கையாலாகத்தனத்தின் உருவம்
கூர் தீட்ட
“வெள்ளை வான்கள்’ கொண்டு சென்ற
பிள்ளைகளின் தேடலோடு
நாதியற்று எரிந்து சுருளும்
இந்தச் சரீரமாய்
இனியொரு போதும் அண்ணன்களுக்காய் கண்ணீர் விடுவதில்லை
இனியொரு போதும் பிள்ளைகளுக்காய் கண்ணீர் விடுவதில்லை
இனியொரு போதும் கணவர்களுக்காய் கண்ணீர் விடுவதில்லை
இனியொரு போதும் மனைவிகளுக்காய் கண்ணீர் விடுவதில்லை
மேலும் காணாமல்போகும் இவர்களுக்காயும்.