புதுவைப் பெருந் தீ - பொள்ளாச்சி அபி

இன்றைய கவிதை இலக்கியத்தின்,ஆகப்பெரும் கவிஞர்களில்,அகரமாய்,தமிழின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின்,80 ஆவது பிறந்தநாள் விழா,23.3.2014 அன்று, புதுவையில் நடைபெற்ற செய்தியை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அயல்நாடுகளில் இருக்கும் கவிஞர்கள் ரோஷான் ஜிப்ரி,நிலா சூரியன், சரவணா, அகமதுஅலி, கே.எஸ்.கலை,தேவா சுப்பையா உட்பட,தமிழகம் மற்றும் பிறபகுதிகளில் இருந்தும் இவ்விழாவில் கலந்து கொள்ளமுடியாத நமது எழுத்துத் தளத் தோழர்களின் மானசீக வாழ்த்துக்கள் வந்து முதலில் அரங்கத்தைச் சுற்றி,அலங்கரித்து நிற்க..,
தோழர் அகன் அளித்த வரவேற்பை ஏற்று, மேடையில் ஏறிய இலக்கியச்சான்றோரின் வார்த்தைகளெனும் வாழ்த்துப் பூக்களால், தமிழன்பனின் தாள்கள் நிரப்பப் பட்டன.சிறப்புக் கவியரங்கத்தில்,தமிழன்பனைப் போற்றும் வாய்ப்பு கிடைத்ததால்,சொற்கள் செருக்குற்று தலைநிமிர்ந்து நின்றன.
தமிழழென்[ண்]பது தமிழன்பன்,தொட்டில் சூரியன், அலகுகளால் செதுக்கிய கூடு,எனக்கென்று ஒரு முகமில்லை, சூரியக் கீற்றுக்கள்,வகுப்பறைக்குள் வண்ணத்துப்பூச்சி,ஆகிய கவிதை தொகுப்புகளும், செங்காத்து வீசும் காடு எனும் சிறுகதைத் தொகுப்பும் விழாமேடையில் வெளியிடப்பட்டது.
தன்னை வளர்த்த தமிழையும்,தான் வளர்த்த தமிழையும்,அன்போடு எடுத்துரைத்த தமிழன்பனின் ஏற்புரையும் நிகழ்ந்தது.
தாய்த்தமிழை,தாய்நாட்டை தங்களுக்கு தெரிந்த வழியில் அலங்கரித்த 80 பேர்,விழா நாயகர் கரங்களிலிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த எண்பதில் 22,நமது நெருங்கிய எழுத்து தள சொந்தங்கள் என்பதில் மகிழ்ச்சி.இந்த 22.லும் 12 பேர் தோழியர் என்பதில் இன்னும் பெருமகிழ்ச்சி.
ஒரு சடங்குபோல கடந்துபோகும் சலிப்பூட்டும் சம்பிரதாய விழாக்கள் நடுவே,புதுவையில் நடைபெற்ற இவ்விழா சாதாரணமானதல்ல.
பல ரணங்களைக் கடந்துவந்த,சாதாரணங்கள் ஒரு சரித்திரமாய் மாறி நின்ற சாதனைப் பெருவிழா..! தான் சூட்டும் மாலைக்கு பொருந்தும் தோள்கள் எவையென,வெற்றிகளே தேடிவந்து.விருதுகளைச் சூடிச் சென்ற விழா..!
சாதனைப் பயணங்களின் வெளிச்சத் திசையைக் காட்டும்,தீபங்களை ஏற்றி வைத்த திருவிழா..! இனி இந்த தீபங்கள் தாய்நாட்டை வெளிச்சப் படுத்திடுமே..எனும் நம்பிக்கைப் பெருவிழா..!
அக்கினிக் குஞ்சொன்றையெடுத்து,ஆங்கோர் பொந்தில் வைத்த தோழர் அகனுக்கு எம் நன்றி.!