பூமியும் நெடுங்காலம் சுமக்காது

வீதிகள்
வெறிச்சோடி கிடக்கின்றன
வெறும்
பாறை முகங்கள்
ஆங்காங்கே
பக்கம் பார்க்காமல் பறக்கின்றன..!!

கலியுகக்
காட்டு மரங்களுக்கு
கிளைகளும் இல்லை
இலைகளும் இல்லை
வேர் ஒன்று
நிலம் துளைத்து
நீர் மட்டும்
தேடி இழுத்து
கழிவாக்கி வைக்கின்றது
மறு
சுழல் செய்து
நிலம் சேர்க்க
நாதியற்று
ஏரி குளம்
ஆறு கடல்
அனைத்திலும் சேர்ந்து
சுயநல நாற்றம் அடிக்கின்றது..!!

வாகன சுத்தம்
வெளி எங்கிலும் அசுத்தம்..
ஆடை சுத்தம்
தண்ணீர் எல்லாம் அசுத்தம்..
உணவு சுத்தம்
எச்சம் எல்லாம் குப்பைத் தோட்டம்..

கூடுகள் சுத்தம்
கை துடைத்துவிட்ட
அக்கம் பக்கம் எங்கிலும்
அலையடிக்கும் அசுத்தம்..!!

கோடி கைகள்
போட்டி போட்டு
அலைகின்றன
கொட்டிவிட்டு
போவதற்கு மட்டும்..

சுத்தம் செய்ய
நேரமற்றவர்களுக்கு
அசுத்தம் செய்ய மட்டும்
எப்படி நேரம் கிடைக்கின்றது..!!

தேவை
இல்லாதவற்றை
பூமியும் நெடுங்காலம்
சுமக்காது..
கக்கித் துப்பிவிடும்
காரண கர்த்தாவை..!!

எழுதியவர் : வெ கண்ணன் (28-Mar-14, 8:29 pm)
பார்வை : 666

மேலே