சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் - 13
சொர்க்கம் எங்கே ? தொடர்
அத்தியாயம் - 13
13.
கிங்கரர்களே ! நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்ட பிறகு சொர்க்கலோகம் எனக்கு கிடைக்குமா என்றொரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று தான் தோன்றுகிறது.
கருடபுராணத்தில் என்னென்ன பாவவங்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் என்று சொல்லியிருக்கிரார்களாமே. அந்நியன் என்றொரு சினிமாவிலும் கூட அதைப்பற்றி பார்த்திருக்கிறேன்.
கருடபுராணம் வாங்கி அதையெல்லாம் படிக்கவேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் கருடபுராணத்தை வீடுகளில் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள் பெரியோர்கள். அதனால் அந்த வாய்ப்பை இழந்து விட்டேன்.
நான் நற்காரியங்களும் செய்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஒருவேளை எனக்கு சிவலோகமோ அல்லது வைகுண்டமோ கிடைக்கும் என்று நம்பிருந்தேன். அதெல்லாம் பகற்கனவு போலாகிவிடுமா ?
மானுடா ! சிவலோகம் கைலாய மலையில் இருப்பதாகவும், வைகுண்டம் அதற்கு மேல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்விரு உலகங்களுக்கு அப்பால் உள்ளது பிரம்மலோகம் என்று ஒரு சாரர் நம்புகிறார்கள்.
நான் அறிந்ததெல்லாம் பூலோகமும் எமலோகமும் மட்டும் தான். சுவற்றின் மீது வீசி எறியும் பந்து எப்படி மீண்டும் அங்கும் இங்கும் சென்றவண்ணம் இருக்குமோ அதுபோல் தான் கிங்கரர்களும். பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையில் உயிர்களை சுமந்து செல்கின்றோம்.
திரிசங்கு சுவர்க்கம் என்பது பூமிக்கும் சுவர்க்க லோகத்திற்கும் இடையில் இருக்கவேண்டும்.
கிங்கரர்களே ! வைகுண்டம் கல்லெறியும் தூரத்தில் தான் இருக்கிறது என்று ஒரு ராஜாவின் கதையில் ஒரு பண்டிதர் சொல்லியிருப்பதை படித்திருக்கிறேன். ஆனால் வைகுண்டம் சத்யலோகதிற்கும் அப்பால் இருக்கிறது என்கிறார்களே ? வேதங்கள் கூறுவது என்னவென்றால் மனிதர்கள் வேதம் சொல்லும் வழியில் வாழ்கை நடத்தி, சத்யலோகத்தில் இருக்கும் பிரம்மனுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்பது தானே ? அப்படியென்றால் மனிதர்கள் வைகுண்டத்தில் வீற்றிருக்கும் மகாவிஷ்வையும், லக்ஷ்மி தேவியையும் பார்க்கவே முடியாதா ?.
- வளரும் -