கழுதைக்கும் தெரியும் கற்பூர வாசனை

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது. பொதி சுமப்பதில் அதற்கு நிகர் அது மட்டுமே (அவ்வளவு பொதி சுமக்கும்). அது எப்போது பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும், "வேண்டும் வேண்டும்" என்பது போல அதனுடைய தலையை மேலும், கீழுமாக ஆட்டிக் கொண்டிருக்குமே தவிர ஒருபோதும் "வேண்டாம்" என்பதுபோல் பக்கவாட்டில் ஆட்டாதாம்.
அதைப் பார்த்த அக்கழுதையின் எஜமானனுக்கு, இதை வைத்தே பணம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் வந்ததாம். அதுமுதல், தன் கழுதையை பக்கவாட்டில் "வேண்டாம்" என்பது போல தலையசைக்க வைப்போருக்கு 1000 ரூபாய் பரிசளிப்பேன் எனவும், போட்டிக்கு வந்து அதில் தோற்றால் 500 ரூபாய் அபராதம் தரவேண்டும் எனவும் போட்டி ஒன்றை அறிவித்தான்.
அப் போட்டியை துச்சமாக எண்ணி, அதில் கலந்துகொண்ட பலர் தங்கள் 500 ரூபாய்களை இழந்தனர். நாட்கள் நகர்ந்தன. கழுதையும் தன் தலையை பக்கவாட்டில் அசைக்கவேயில்லை. புத்திசாலி எஜமானனும் பணத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.
சில காலம் கழித்து, ஒருவன் அப் போட்டியில் கலந்துகொள்ளவிளைந்தான். அவன், போட்டியின் பரிசுத்துகையை சற்று மாற்றுமாரு அக் கழுதையின் எஜமானனை வேண்டினான். அதாவது, போட்டியில் தான் தோற்றால், இதுவரை கழுதையின் எஜமானனிடம் உள்ள அனைத்து சொத்துக்களின் மதிப்பைவிட 100 ரூபாய் அதிகமாக தருவதாகவும், ஜெயித்தால், அவனிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் தரமுடியுமா? என்று கேட்டான். இதைக்கேட்ட கழுதையின் எஜமானன் செருக்குற்று, தன் கழுதையின்மேல் அதீத நம்பிக்கை கொண்டு, அந்த பரிசுத் துகைக்கு ஒத்துக்கொண்டான்.
உடனே, போட்டியில் பங்கு பெற வந்தவன், கழுதையின் காதில் ஏதோ கூற, சற்றேனும் தாமதியாமல் அக்கழுதையும் பக்கவாட்டில் தலையசைத்தது. அதைக் கண்ட கழுதையின் எஜமானன் நிலைகுலைந்தான். என்ன நிலைகுலைந்து என்ன செய்ய? விதி யாரை விடுத்தது? அழுதுகொண்டே அவனும் தன் சொத்துக்கள் அனைத்தையும் (கழுதையையும் சேர்த்து) போட்டியில் வென்றவனிடம் கொடுத்தான். கொடுத்துவிட்டு, கழுதையின் காதில் என்ன கூறப்பட்டது என்று மட்டும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான்.
அதற்கு போட்டியில் வென்றவன் நமுட்டுச் சிரிப்புடன், "நம் நாட்டில், வங்கிகளில் அதிகாரி வேலைகள் காலியாக இருப்பதாகவும், நீ விரும்பினால் வாங்கித்தருகிறேன்" என்று மட்டும்தான் நான் கூறினேன் என்றான்.
பின்குறிப்பு: இக்கதை நடந்தது 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு... (தனக்கு மேலே உள்ளவர்களிடம் நல்ல பேர் வாங்கவும் இயலாமல், தனக்கு கீழே உள்ளவர்களிடம் வேலை வாங்கவும் முடியாமல், இந்திய நாட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் சிக்கி வராக் கடன்களை அளித்து, ஒய்வு பெரும் நேரத்தில் ஓய்ஊதியம் முழுதாய்க் கிடைக்குமா? என்று தத்தளிக்கும் வங்கி அதிகாரிகளின் தற்போதைய நிலவரம் இதுவே)