மனம் என்னும் புரவி

மனமென்னும் புரவி
தறி கெட்டோடும்
இன்ப துன்பங்களை
கண்டு மூச்சிரைக்க ஆடும் ்
கலங்கும் நினைவுகளுக்கு
நீள் கடிவாளம் வேண்டும்
ஒடி தேய்ந்த எண்ணங்களுக்கு
லாடம் அடித்திட வேண்டும்
கட்டுப் படா ஆசைகளை
தொழுவத்தில் கட்டிப் போட வேண்டும்
ஆசை எனும் தேர்ப் பூட்டி
நாலு காலில் பாயும்
தோல்வி எனும் சூழலிலோ
பெருங் கணைப்ப்பு கணைக்கும்
புகழ் தேடும்
மனதின் வழி தாவும்
புத்தி மதி சொல்ல வந்தால்
நகைக்கும்
எல்லாம் தெரியும் என்ற கர்வத்தில்
சேனம் ஏற்றி சிம்மாசனம் அமரும்
வெற்றி மிக்க கண்டு விட்டால்
ஆனந்த கூத்தாடும்
தொடர் தோல்வி கண்டுவிட்டால்
மூலையிலே முடங்கும்
மூளை சொல்லும் கட்டளையை
காலிலிட்டு மிதிக்கும்
ஓடி ஓடி களைத்த பின்னும்
ஓயாது எண்ண ஓட்டம்
உயிருள்ளவரை நிற்காது
புரவியின் ஆட்டம்......

எழுதியவர் : சித்ரா ராஜ் (3-Apr-14, 5:56 am)
Tanglish : manam ennum puravi
பார்வை : 115

மேலே