கண்ணீரை புதைக்கிறேன்

என் கணினியே !
என் ரகசிய சிநேகிதியே !!

என்னை நான் உருமாற்றி
கண்’னை தடம்மாற்றி
அன்றைய நிகழ்வினை
மறைக்க, மறக்க முயலுபவன்

எனக்குள்ளே ஒரு கதறல்
நானே அதற்கு ஆறுதல்
தானே கொண்டேன் மாறுதல்
அதுதானே என் திருவிளையாடல் !

என் கணினி செல்லமே !
ஏனோ இன்று
என்னுள் ஒரு மனவலி
உன் வழியே
என் வலியை
சொல்கிறேன் கேள் !

இதுவரை
யாரிடமும் சொன்னதில்லை –என்னை
யாரும் கேட்டதில்லை
யாவும் என் தவறில்லை

நான் வாசித்த கவிதையொன்று
நான் வீசியெறிந்த அந்த
நினைவுகளை என்முன்
நிழற்படமெடுத்து காட்டியது.
சிலிர்த்து சிரித்து
பழித்து பல்’இளித்து
கொக்கரித்து குடைகிறது.

என் முதல் நினைவினை
காதல் நினைவுகளை
காதலி போன்ற தோழியின்
உண்மையான உறவு ஊடல்களை…
வெகுளியான சிநேக முத்தங்களை…..
மறக்க நான் நினைத்தாலும்
மறுக்காமல் வந்து அவள்
மரணநாளில் என்னை
கொல்லுகிறது..!

அவள் எனக்கு
தோழியா ! காதலியா ??– எனக்கு
காதல் தோல்வியா ?
சொல்லாமலே சென்றுவிட்டாள்
இறுதிவரை –அவளின்
இறுதி ஊர்வலம் வரை….

ஆண் என்ற நான்
அழக்கூடாது என்ற
அழுத்ததுடன் ….
கண்ணீரை கண்ணுக்குள்ளே
புதைத்து வெம்புகிறேன்.

கணினியே…!
என் செல்லமே…!
அடுத்து என்ன வேலை ?
இலட்சியம் இருக்கு,
வெற்றிக்கான வெற்றிடம்
இன்னும் இருக்கு.
சாதிப்போம் வா !
கணினியே !
என் ரகசிய சிநேகிதியே !!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Apr-14, 7:02 pm)
பார்வை : 389

மேலே