அடச் சீ என்ற அன்பர் அனைவரும் அறிவாளி --- இராஜ்குமார் ---

இன்றும் ஒரு பயணம்
ரசித்தே நடந்தேன்
செல்லும் வழியில் ..
நீரை மிதித்தேன்
துளிகள் தெறித்தன ..
தெறித்த துளிகளில்
ஒருதுளி மட்டும்
தோலில் பட்டது
தோல் நனைந்து
தேகம் சிலிர்த்தது
சிலிர்த்த தேகம்
சிந்தையில் சொன்னது
சிந்தை சொன்னதை
விரல்கள் விரைவாக
தடம் மாறி செல்லும்
கழிவு நீரை அதன்
வழியில் அனுமதித்து
துர்வாடை வீசுமந்த
துளைதனையே
மூடி வைத்தேன் மெதுவாக
யாரும் வீழும் முன்னே
கண் நிமிர்ந்து பார்த்து
கலங்கி போனேன்
உடன் இருந்தவனும் - ஏனோ
ஒதுங்கி நின்றான்..
அருகில் சென்ற
அனைவரும் தந்த
அன்பளிப்பு
"அடச் சீ" அசிங்க
சொல்மாலை ..!
ஏளன சிரிப்புடன்
"அடச் சீ" என்ற அன்பர்
அனைவரும் அறிவாளி ..!!
வழியில் வழிந்தோடும்
கழிவு நீரை
கட்டுபடுத்திய நான்
காட்டானே ..!
தடம் மாறும்
கழிவை கட்டுபடுத்தலாம்
தடம் மாறும் இவர்களின்
எண்ண கழிவை எப்படி ?
சமூக சீர்குலைவு
சில அறிவாளி கைகளில் ..!!
--- இராஜ்குமார் ..
===============================================
சமூக அக்கறை வேண்டி சில அனுபவ வரிகள்
===============================================