மீசை மாமா

இது உண்மையாக நடந்த, என்னைத் தாக்கிய சிறிய நிகழ்ச்சியை மையமாக வைத்து மேலும் நிறையவே கற்பனைகளைச் சேர்த்து இயற்றிய கதைதான் இது.
என்றோ கோபத்தில் சுவற்றில் தேய்த்த போது மழுங்கிய மூக்கு.
வீட்டின் வருமையை பிரதிபலிக்கும் கரைபடிந்த ஆடை.
உடைந்து போன வலக்கை.
இத்தனை இருந்தும் அழகாய் தாய் மடிக்கிடக்கும் பிள்ளைப் போல அந்த குழந்தை மடியில் கிடக்கிறது பொம்மை.
கறை அனைத்தும் போனாலும் குழந்தைக் கையில் இருக்கும் ஆர்வத்தில் தன்னைப் பிழிந்து பிழிந்து மையை கொட்டுகிறது அந்த ஸ்கெட்ச் பென்.
பலமுறை வரைந்த தடம் இருந்தாலும் மேலும் மேலும் அந்த பெண் பொம்மைக்கு மீசை வரைந்து கொண்டே இருந்தாள் அந்த குழந்தை.
“இன்னும் அங்க என்னடி பண்ற” என அம்மா எங்கோ இருந்து குரல் கொடுக்க. திடுக்கிட்ட குழந்தை எல்லாவற்றையும் போட்டுவிட்டு எழுந்தது. தாயவள் ஓடி வந்து, “இப்போ என்னடி பொம்மைய கைல வச்சிக்கிட்டு,.. சாமி கும்பிட வா” என ஒரு அடியை குழந்தை முதுகுக்கு கடத்திவிட்டு, இழுத்துச் செல்கிறாள். நுழைவறையின் மூலையில் தங்க நிற சட்டத்தின் உள்ளே மிடுக்கான மீசையோடும், காக்கி உடை பேசும் கம்பீரத்தோடும், மலர் மாலை, ஊதுபத்தியுடன் சேர்ந்து மணந்தார் குழந்தையின் தந்தை.
“என்னடி முழிச்சிக்கிட்டு நிக்குற? கண்ணமூடி ஃபோட்டவ பாத்து கும்பிடு”
சரி என தலையசைத்தது குழந்தை..
பாவம் கண்கள்மூடி அமைதி தேடும் வயதில்லை, மெல்லமாய் இன்று மலர்ந்த முல்லையைப் போல கண்களைத் திறந்து முதலில் தாயை நோட்டம் விட்டுவிட்டு, பின் மீசை மீது பார்வை போனது. அப்பா கையால் தாலாட்டப்பட்டதில்லாத அந்த பிஞ்சுக்கு மீசை அன்பிற்குரிய பெரிய கலங்கரை விளக்கமாகத் தெரிந்தது. மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று சாப்பிட அமர்த்தினாள்.
நெழிந்த தட்டில் சாதம் கொட்டி இருக்க, சாம்பார் நடுவில் தேங்கி இருக்கிறது. சுற்றி இரண்டு கூட்டுகளும் சிறப்பிக்கிறது. ஆனாலும் இந்தக் குழந்தைகளுக்கு தான் சாப்பாடு பிடிப்பதே இல்லை.. ஒரு வேலை பொம்மைகளுக்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதது தான் காரணமோ என்னவோ!
தாய்க்குத் தெரியாத வழியா என்ன...சிரித்துப் பார்த்தாள், அதத்தியும் பார்த்தாள் வழிக்கு வரவில்லை. பின் சட்டென்று எழுந்தவள் பக்கத்து வீட்டுக்குத் தயக்கத்துடன் சென்றாள். ஜன்னல் இடுக்கு உள்ளிருந்த காணொலி கீதத்தை ஒழுக விட்டுக்கொண்டிருந்தது. இசையில் சற்று துழைந்தவளாய் ஜன்னல் இடுக்கில் தெரியும் பெரியாரின் புகைப்படத்தைப் பார்த்தாள், சற்று முன்வந்து ஜன்னல் கதவை மேலும் தள்ளிய போது பாரதியின் அரைபாதி முகமும், மீசையும், ரௌத்திரம் நிரைந்த வலக்கண்ணும் தெரிந்தது. வெறித்து நோக்கும் கண்கள் அவளை நெஞ்சில் சுருக்கென குத்துவது போல் இருந்தது. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த போது, திடுக்கென ஒரு உருவம் அதே பாரதி மீசையோடு ஜன்னல் பக்கம் வந்தது.
“என்னக்கா சொல்லு...” பக்கத்து வீட்டுகாரர்.
“இல்லப்பா பொண்ணு சாப்பிட மாட்டுது அதான்......” என இழுத்தாள்
“இருகா இதோ வரேன்...”
“தப்பா எடுத்துக்காதப்பா... அது டேய்லி இப்பிடி பண்ணுது”
“பரவாயில்லக்கா கொழந்த தான...” என சொல்லிக்கொண்டே கதவை தாழிட்டு நடக்கத் தொடங்கினான். வீதி கடந்து இருவரும் அவள் வீட்டிற்க்குள் நுழையும் போது எதிர் வீட்டு வேலைக்காரி பார்வை விழுவதை கவனித்தாள். மறு பக்கம் மூடி இருந்த கதவையும் திறந்து விட்டு, விசாலமாய் வீட்டின் உள்ளே தெரியும் நிமித்தமாய் எதிர் வீட்டுக் கழுகுகளுக்கு பட்டினி போடும் நிம்மதியோடு நிலைவாசலிலே அமர்ந்தாள். குழந்தை அடக்கமாய் உட்கார்ந்து பக்கத்து வீட்டு மாமாவோடு உண்பதை பார்த்து இரசித்தாள்.
குழந்தை சாப்பாட்டை முடித்ததும் அவர் எழுந்து வெளியே போக, “ரொம்ப.. தங்க்ஸ் தம்பி..”
“பராவாயில்லக்கா”
சுருக்கமாக முடித்தனர். ஊர் கண்கள் அனைத்தும் அந்த நேரத்தில் அங்கு தான் மேய்ந்துக் கொண்டிருந்தது. இருந்தும் பொருட்படுத்தவில்லை இருவரும்.
சிறிது நேரம் கழிய, குழந்தையை வேக வேகமாய் தயார் செய்து கையில் பெரிய பையை எடுத்துக் கொண்டு குழந்தை கையை பிடித்து நடக்கத் தொடங்கினாள்.
“மா... விளையாட போகனும் மா.. ப்லீஸ்”
“......”
“போன வாரம்தான மா மார்க்கெட் போனோம்... அதுக்குள்ள திரும்பவா?”
“ஆமாடி தேவ இருக்கு”
“நீ மாட்டப்போற பாரு” என குழந்தை புன்னகைத்தது
“பேசாம வாடி.... நீ மாட்டிக்காம இரு அது போதும்” என சற்று அழுத்தமாய் கூறினாள்.
இரண்டு தெருக்கள் தாண்டி அவளது தோழிகளும் தங்களது சிறு குழந்தைகளோடு காத்திருந்தனர்...
“என்னடி இவ்வளவு நேரம்”
“இதோ இவ சோற சாப்பிடுறதுக்குள்ள படுத்திட்டா”
அனைவரும் நடக்கத் தொடங்கினர்
“சரிடி பழைய காய்கறிலாம் வித்து முடிஞ்சதா?”
“அது சரியான லாபம், அதுலதான் இந்த புது சேல வாங்குனேன்..
இது கல்யாணில கனகா கட்டிட்டு வந்ததுல அதே சாரி”
“எனக்கு தான் நெறய அழுகிப்போயி வீணாயிருச்சி” என பெருமூச்சிவிட்டள் ஒருவள், சேலையை தொட்டுப்பார்த்தவளாய்.
அரைமணி நேரம் நடைக்குப் பின், மார்க்கெட் வந்தது..
அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் தனி தனியே பிரிந்தனர்.
கடைவீதிக்குள் இருவரும் நுழைய, முதல் கடையில் காய்ந்த வடகங்கள் அடியும் புடியுமாக விற்றுக் கொண்டிருந்தன.. தாயும் குழந்தையும் அருகே சென்று வடகத்தின் பக்குவம் பார்த்தனர். பின் அவள் எதுவும் வாங்காமல் கடைக்கு பக்கவாட்டில் வந்து நின்றுகொண்டால்.அந்த பச்சிளம் குழந்தை தனியே போய் மெதுவாய் நிற்கிறது கடை எதிரே, பொருட்களை கவனிக்க நேரம் இல்லாதவராய் கடைக்காரர் வாடிக்கையாளர்கள் முகம் பார்த்து வியாபாரம் செய்துகொண்டிருக்க. அந்தக் குழந்தை தேர்ந்தவளாய், கண்கள் கவனிக்க வேண்டிய முகங்களை நோட்டம் விட, கைகள் சரியாக அவள் அம்மா விலைவிசாரித்த வடக கட்டை மென்மையாக எடுத்தது. எடுத்த மறுகனம் தாயிடம் ஓடினாள், அவள் வேகமாக அதை பிடுங்கி தன் பைகுள் தினித்தாள். அந்தக் குழந்தை வெற்றிக் களிப்போடு சிரித்தாடியது.
பக்கென இருந்தது இதை எதர்ச்சயாக கவனித்துக் கொண்டிருந்த டீச்சருக்கு. அவள் பக்கத்து வீட்டு மீசைக்காரரின் மனைவி, அந்தக் குழந்தையின் ஆசிரியரும் கூட. அவள் மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்பின. எதிர்காலம் சற்று எமாற்றத்துடன் தெரிந்தது. அறம் செய்ய விரும்பு என்பதைச் கதைகளைய்ச் சொல்லி, எடுத்துக்காட்டுகளைச் சொல்லி, நடித்துக் காட்டி ஐந்து நாட்கள் நடத்தினாலும் ஒரே நாளில் அதை ஏட்டுச் சுரக்காயாக்கிவிட்டாளே என நெஞ்சம் குமுரியது.
அவர்களைத் தொடர்ந்து சென்று கவனித்தாள், குழந்தையைவிட உயரமாக நின்றுகொண்டிருந்த வண்டிக் கடைகளில் அவர்கள் முழுக்கவனமும் இருந்தன. அம்மா என்பவள் காய்கறிகளைப் பதம் பார்பவளாய் கையில் எடுத்து கடைக்காரன் கண்பார்த்து கீழே நழுவ விட அதைக் கச்சிதமாய்ப் பிடித்து பைக்குள் போடவேண்டியது குழந்தைக்கு கொடுக்கப்பட்ட கடமை. அவர்கள் கிடைப்பதை எடுப்பவராக இல்லை, தேவையானதை திறமையாக திருடுபவராக இருந்தனர். சில பேர்கள் சந்தேகப் பட்டுக் கேட்டாலும் பெண் என்ற கேடயமும், உரக்கச் சொன்னால் உலகம் நம்பும் என்ற யுக்தியை போர்வாள்ளெனக் கொண்டும் பிழைத்துவிடுகிறாள். இவையெல்லாம் கண்டு நெஞ்சம் கனத்தவளாய் வீடு திரும்பிவிட்டாள்.
போகும் வழியில் பார்க்கும் குழந்தைகளின் எதிர்கால சமூகம் நினைத்த கவலை விழிகளில் நீர்க் குமிழிகளாய் எட்டிப் பார்த்தன. வீடு வந்து தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். அவள் விரும்பி தன் அலமாரியின் கைப்பிடிக்கு மேல் ஒட்டியிருந்த “ரௌத்திரம் பழகு” என்ற உரையுடன் இருந்த பாரதியின் சிவந்த கண்கள் இன்று அழுவதற்காக சிவந்தது போல் அவளுக்குத் தோன்றியது. அதை வெறித்தவளாய் எதையோ யோசித்தவளாய் அன்று முழுதும் கடந்து அப்படியே உறங்கியும் விட்டாள்.
மறுநாள் பள்ளியில் மணி அடித்தாயிற்று. சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் எல்லாம் அமைதியாய் உட்கார்ந்திருக்க வெளியே காக்கைகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. வகுப்பறையில் அனைத்துக் குழந்தைகளும் அங்கங்கே விளையாடிக் கொண்டிருக்க அந்தக் குழந்தை மட்டும் முன்னால் நின்று கொண்டு கரும்பலகை மேல் காந்தி தாத்தா பக்கத்தில் புதிதாய் ஒரு சட்டத்தில் தொங்கும் படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது...
“குட் மார்னிங் டீச்சர்..” குழந்தைகளின் பின்னனி
“எல்லாரும் ஒழுங்கா அவரவர் எடத்துல உக்காருங்க.... ஓடு.. ஓடு..
நீ மட்டும் ஏன்மா இங்க நிக்குற.. போ”
“டீச்சர்.. புதுசா இருக்குற இந்த மீசமாமா யாரு டீச்சர்?”
அவள் பதில் சொல்லும் முன்னரே
“காந்தி தாதா கூட சேந்து சண்டபோட்டவரா?” என அடுக்கியது கேள்வியை.
“நீ போய் உட்காருமா நா சொல்றேன்”
“அவரு தன்னோட பாடல்கள், கவிதைகள் மூலமா சுத்ந்திரத்துக்காக் போராடுனாரு,அதுபோக அவரு குழந்தைகளுக்காக பாட்டுலாம் எழுதிருக்காறு, அத கேட்டு நடந்தா நீங்களாம் நல்ல பிள்ளைகலா வளரலாம்”
“டீச்சர் எங்களுக்கு எதாவது பாட்டு பாடிக்காட்டுங்க டீச்சர்..”
சற்று சிரித்தவளாய் தன் மொபைல் போனை எடுத்தாள், அவள் மனதில் இருந்த நெருடல் முகத்தில் தெரிந்தாலும், துனிந்து பாடலை ஓட விட்டாள்...
“திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ………………” எனப் பாடல் தொடர்ந்தது.
குழந்தைகள் இசையிலும் எளிமையான வரிகளிலும் மயங்கியே போனார்கள். அந்தக் குழந்தையின் முகம் மட்டும் சற்றுக் குளப்பம் அடைவதைக் கண்டாள். பாடல் முடிவடைந்ததும், அந்தக் குழந்தை தானாக டிச்சரிடம் வந்தது.
“டீச்சர், எனக்கு அந்த மாமா போட்டா கொடுப்பீங்களா?”
அழகாய் கேட்ட குழந்தைக்கு உடனே தன் கைப்பையில் இருந்து பாரதியின் புகைப்படம் எடுத்துக் கொடுத்தாள்
“தங்ஸ் டீச்சர்”
“ஏன்மா! அந்த மாமா சொன்னதெல்லாம் கேட்பியா?”
“எனக்கு அந்த மாமா மீச ரொம்ப புடிச்சிருக்கு டீச்சர் அதனால கண்டிப்பா கேப்பேன்” என வன்னமாய்ச் சிரித்தது.
பின் மறுவாரம் கடைவீதியில் அந்த அம்மா தனியாக காய்கறிகளை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த போது ஆனந்தமாய் நினைத்துக்கொண்டாள். பாரதி குழந்தை திருடும் என நினைக்கவில்லையோ என்னவோ, பாப்பா பாட்டில் திருடக் கூடாது எனச் சொல்லவில்லை. எனவே வேறு வழியில்லாமல், குழந்தைக்கு எளிமையாக புரியவேண்டும் என, பாரதி முகம் காட்டி பட்டுக்கோட்டையார் வரிகளைப் பாடி பாடம் புகட்டிவிட்டேன், மன்னிக்கவும். தவறாகச் சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை தவறாகப் போகத்தான் சொல்லிக்கொடுக்கக் கூடாது.
-ந.நா